சுட்டு வீழ்த்தப்பட்ட பலூன் பற்றிய தகவலை பகிர அமெரிக்கா மறுத்து விட்டது- சீனா குற்றச்சாட்டு!!
அமெரிக்க வான்வெளி பகுதியில் பறந்த சீனாவின் உளவு பலூனை சுடுமாறு அந்நாட்டு அதிபர் ஜோபை டன் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 4-ந்தேதி தெற்கு கலிபோர்னியா கடற்கரை பகுதியில் அமெரிக்கா போர் விமானம் அந்த பலூனை சுட்டு வீழ்த்தியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அது உளவு பலூன் அல்ல என சீனா மறுப்பு தெரிவித்தது. ஆனால் அது உளவு பலூன் தான் எனக்கூறி அதன் சிதறிய பாகங்களை சேகரித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருகிறது. இது பற்றிய விசாரணையும் நடந்து வருகிறது. இது குறித்த தகவல்களை தெரிவிக்குமாறு அமெரிக்காவிடம் சீனா கோரிக்கை விடுத்தது. இதை அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.
இந்த நிலையில் சீனா பலூன் பற்றிய தகவல்களை பகிர அமெரிக்கா மறுத்து விட்டதாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக அதன் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறும் போது பலூனை சுட்டதில் இருந்து அதனை பகுப்பாய்வு செய்வது வரை முற்றிலும் தன்னிச்சையாகவும், மறைமுகமாகவும் அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இது பற்றி எந்த விளக்கத்தையும் அந்த நாடு பகிரவில்லை என்று தெரிவித்து உள்ளார்.