துருக்கி, சிரியாவை துரத்தும் துயரம் … நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது!!
நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே மையமாக கொண்டு பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இரு நாடுகளையும் நிலைகுலைய வைத்துள்ளது. சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களுக்கு பிறகும், அங்குள்ள 11 மாகாணங்களில் 6,040 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதில் 40 நிலநடுக்கம் 5 முதல் 6 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. இந்த கொடூர நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ தாண்டியுள்ளது. நிலநடுக்கத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட 50 ஆயிரம் பேரில் 44,218 பேர் துருக்கியை சேர்ந்தவர்கள். அதேபோல் சிரியாவில் 5,914 பேர் இதுவரை நிலநடுக்கத்தால் உயிரிழந்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
மேலும் 15 லட்சம் மக்கள் வீடற்றவர்கள் ஆகினர். சுமார் 1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும், 5.20 லட்சத்துக்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 3 வாரங்கள் கழிந்த நிலையில் மக்கள் வீடு, உடைமைகள் இழந்து தவித்து வருகின்றனர்.துருக்கியில் மீட்பு பணிகள் முடிவுக்கு வந்தன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், தாங்கள் குடியிருந்த வீடுகளுக்கு திரும்பி அங்கிருக்கும் பீரோ, கட்டில், மின் சாதனங்களை எடுத்து செல்கின்றனர்.
எங்கே சென்றாலும் இந்த பொருட்கள் தேவைப்படுவதால் வேறு வழியில்லாமல் எடுத்து செல்வதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். கட்டிடங்கள் கற்களாக மாறி குவிந்து கிடக்கும் நிலையில், பெண்கள் கண்ணீருடன் காத்து கிடக்கின்றனர். கிடைக்கும் பொருட்களை ஆண்கள் தேடி எடுத்துக்கொண்டு பெண்களை வாகனங்களில் அழைத்து செல்வதை காண முடிகிறது.