சுமார் 8,500 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக எரிக்சன் நிறுவனம் அறிவிப்பு : ஊழியர்கள் அதிர்ச்சி!!
உலகளவில் கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் உள்ளிட்ட முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருக்கும் நிலையில், அந்த பட்டியலில் எரிக்சன் நிறுவனமும் இணைந்துள்ளது. பல்வேறு நாடுகளில் உள்ள தனது அலுவலகங்களில் சுமார் 8,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக எரிக்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. சுவீடனில் மட்டும் சுமார் 1,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பொருளாதார மந்தநிலை எதிரொலியாக நிறுவனத்தின் செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையாக ஆட்குறைப்பு செய்ய இருப்பதாக எரிக்சன் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கார்ல் மேலாண்டர் விளக்கம் அளித்துள்ளார். சுவீடனைச் சேர்ந்த பன்னாட்டு நெட்வர்க்கிங் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனமான எரிக்சன் ஸ்டாக்ஹோமை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எரிக்சன் நிறுவனத்தில் உலகளவில் 1 லட்சத்து 5000 ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.