முன்னாள் அதிபரைக் கொல்வோம் : வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்த ஈரான் – பதற்றத்தில் அமெரிக்கா !!
நாங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்யப் பார்க்கிறோம். இப்போது புதிய அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளோம் என ஈரானிய உயர்மட்ட அதிகாரியொருவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பல புகார்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன.
இதற்குப் பல நாடுகளை நம்மால் உதாரணமாகச் சொல்ல முடியும். கடந்த காலங்களில் பல நாடுகளில் அமெரிக்கா அத்துமீறி நுழைந்ததாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், அமெரிக்கா இதையெல்லாம் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.
அதேபோலத் தான் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கே நிலவி வந்தது. இது கடந்த 2020இல் மிக மோசமானதாக மாறியது. அப்போது ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றிருந்தார்.
அங்கிருந்து மீண்டும் ஈரான் திரும்ப மகிழுந்தில் அவர் பாக்தாத்தில் பயணித்துக் கொண்டிருக்க, அமெரிக்கப் படைகள் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தி அவர் கொன்றது.
அமெரிக்க நலனுக்கு எதிராக அவர் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்ததாகவும் இதன் காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாக அப்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
வெளிநாட்டிற்குச் சென்ற தங்கள் இராணுவ தளபதியை அமெரிக்கா அத்துமீறிக் கொன்றது ஈரானுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அந்நாட்டு மக்கள் சுலைமானிக்கு ஆதரவாகத் திரண்டு, அமெரிக்கா மீது பதிலடி கொடுக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
பல ஈரான் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே அறிவித்தனர். இந்தச் சூழலில், ஈரான் இப்போது அதிநவீன கப்பல் ஏவுகணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இதனால் 1,650 கிமீ (1,025 மைல்) தூரம் வரை செல்ல முடியும் என்று அந்நாட்டின் உயர்மட்ட தளபதி தெரிவித்தார்.
உக்ரைன் போரில் ஈரானின் நாட்டின் ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்தியதே சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், இப்போது இந்த அதிநவீன கப்பல் ஏவுகணை பேசுபொருளாகியுள்ளது. அதேபோல மற்றொரு நிகழ்வில், ஈரான் இராணுவத்தின் அமிராலி ஹாஜிசாதே, “ஈரானின் உயர்மட்ட தளபதியை அமெரிக்கக் கொன்றதை அப்படியே விட்டுவிட மாட்டோம்.
நாங்கள் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொலை செய்யப் பார்க்கிறோம். இப்போது புதிய அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ளோம். இதன் மூலம் 1,650 கி.மீ தூரம் வரை சென்று தாக்க முடியும்.
இந்த புதிய ஏவுகணை இராணுவத்தில் சேர்த்துள்ளோம். எங்களுக்கு அமெரிக்காவின் பாவப்பட்ட வீரர்களைக் கொல்லும் திட்டம் எல்லாம் இல்லை. இப்போது ஈராக்கில் அமெரிக்கப் படைகள் இருக்கிறார்கள். அவர்களை நோக்கி இந்த ஏவுகணையைச் செலுத்தி அந்த வீரர்களை நிச்சயம் கொல்ல மாட்டோம்.
எங்கள் இலக்கு வேறு. எங்கள் தளபதியைக் கொன்றவரைப் பழிவாங்குவோம்.. உண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பைக் கொல்லப் பார்க்கிறோம். முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மற்றும் சுலைமானியைக் கொல்ல உத்தரவிட்டஇராணுவத் தளபதிகளும் கொல்லப்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஈரான் உருவாக்கியுள்ள அந்த அதிவீன ஏவுகணையும் அங்கே மக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டது. அமெரிக்காவுக்கு எதிரான ஈரான் தலைவர்களின் எச்சரிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணைகளை விரிவுபடுத்தியுள்ளது. கடந்த நவ. மாதம் தன் ஈரான் இப்படியொரு ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கா சந்தேகம் தெரிவித்திருந்தது.
இப்போது ஈரானே அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. ஐரோப்பிய நாடுகளும் இந்த விவகாரத்தில் கவலை தெரிவித்துள்ள நிலையில், தற்காப்பிற்காகவே இதை உருவாக்கியுள்ளதாக ஈரான் தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
மேலும், உக்ரைனில் போர் தொடங்கும் முன்பு, ரஷ்யாவுக்கும் ஈரான் தனது ட்ரோன்களை வழங்கியிருந்தது. இந்த ட்ரோன்களை வைத்தே உக்ரைனில் முக்கிய உள்கட்டமைப்புகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.
இதுவும் ஒரு முக்கிய கவலையாக மாறியுள்ளது. ஈரான் ட்ரோன்களை போல இந்த ஏவுகணைகளையும் மற்ற நாடுகளுக்கு வழங்கலாம் என்றும் அவை அப்பாவி நாடுகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.