உத்தரபிரதேசத்தில் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் முக்கிய சாட்சி சுட்டுக்கொலை!!
உத்தரபிரதேச மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜூபால் கடந்த 2005-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்தவர் உமேஷ்பால். இவரது உயிருக்கு ஆபத்து இருந்ததால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. அவர் எங்கு சென்றாலும் 2 பாதுகாவலர்கள் உடன் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை உமேஷ்பால் வெளியில் சென்று விட்டு பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு காரில் வந்தார். அவர் காரை விட்டு இறங்கியதும் பின்னால் இருந்து ஓடி வந்த மர்மநபர்கள் அவர் மீது முதலில் நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்கள். பின்னர் துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் உமேஷ்பால் கீழே சரிந்தார். இதை பார்த்த அவருடன் வந்த 2 பாதுகாவலர்களும் மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர்.
இதனால் அந்த கும்பல் போலீசார் மீதும் துப்பாக்கியால் சுட்டது. இதில் 2 போலீசாரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடி விட்டது. இது பற்றி அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த உமேஷ்பால் மற்றும் 2 பாதுகாவலர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் உமேஷ்பால் இறந்தார். 2 போலீசாருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த கொலை காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் மர்ம கும்பலை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.