தமிழக – கேரள எல்லையில் லாரிகளை மறித்து போராட்டம்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரிக்கை!!
கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிமவளங்கள் கடத்தப்படுவதை தடுக்காவிட்டால், தமிழக – கேரள எல்லையில் லாரிகளை மறித்து போராட்டம் நடத்தப்படும் என விவசாய அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன. இதில் சுமார் 80 கல்குவாரிகள் மட்டுமே அரசின் அனுமதியைப் பெற்று முறையாக இயங்கி வருகிறது.
சுமார் 120 கல்குவாரிகள் அரசின் முறையான அனுமதி இல்லாமல் உடைகல், குட்டுக்கல், ஜல்லிக்கற்கள், கருங்கற்கள், பி.சாண்ட், எம்.சாண்ட் ஆகியவற்றை வெட்டி எடுக்கின்றனர். போலியான நடைச்சீட்டு தயாரித்து கோவையில் இருந்து கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர்.
அரசின் முறையான அனுமதி இல்லாமல், இந்த கனிமவளங்கள் ராட்சத லாரிகளில் தினமும் தோராயமாக 2 ஆயிரம் லோடுக்கும் அதிகமாக, 15 ஆயிரம் யூனிட்டுகளுக்கும் மேல் கடத்தப்படுகிறது. கனிமவளங்களை கேரளாவுக்கு கடத்தும் லாரிகளில் ஒரு யூனிட்டுக்கு ரூ.400 என சிலர் மிரட்டி வசூலிக்கின்றனர்.
எனவே, வாளையாறு, வேலந்தாவளம், உழல்பதி, ஜமீன் காளியாபுரம், மீனாட்சிபுரம், கோபாலபுரம், நடுப்புணி, செம்மனாம்பதி ஆகிய சோதனைச் சாவடிகளில் அடியாட்கள் இருந்து கொண்டு வசூலிக்கின்றனர்.
இந்த கடத்தலுக்கு சில அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். அனுமதியை மீறியும், அனுமதியில்லாமலும் கல்குவாரிகளில் இருந்து கனிமவளங்கள் வெட்டிக் கடத்தப்படுவதால் விவசாய நிலங்கள், நீராதாரங்கள் பாதிக்கப்படுவதோடு, நில அதிர்வுகள் ஏற்படவும் வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
கனிமவளக் கொள்ளை குறித்து கேள்வியெழுப்புபவர்கள் மிரட்டப்படுகின்றனர். கனிமவளக் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை தமிழக – கேரள எல்லையில் விவசாயிகள் மறிப்போம். தமிழக – கேரள எல்லையில் போராட்டமும் நடத்தப்படும். எனவே, தமிழக முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர், கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கனிமவளக் கடத்தலில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
லாரிகளில் வசூல்வேட்டை: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மலையோர பகுதிகளான தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வனவிலங்குகள் ஊருக்குள் வருவது வாடிக்கையான ஒன்றாகியுள்ளது. பல்வேறு விளைபொருட்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன.
விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவள கொள்ளையை தடுப்போம் என திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன் வாக்குறுதி அளித்தது. தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரூரிலிருந்து ஒரு கும்பல் கனிமவள கொள்ளைக்கு துணை போவதுடன் கேரளாவுக்கு செல்லும் லாரிகளில் வசூல் வேட்டை நடத்துகிறது. சொந்த நிலத்தில் மண் எடுப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கும் அதிகாரிகள், கனிமவள கடத்தலை கண்டுகொள்வதில்லை.
இதனால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு ஆதரவு இல்லாமல் இந்த முறைகேடுகள் நடக்காது. இது தொடர்பாக அனைத்து விவசாய சங்கங்களையும் ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் வரக்கூடிய குளங்களில் இருக்க கூடிய வண்டல் மண்ணை சொந்த நிலத்துக்கு எடுத்துச் செல்ல கட்டணம் வசூலிக்க கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.