ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டம்?
ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது தாக்குதல் நடந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த வாரத்தில் மட்டும் இஸ்ரேலின் மூத்த ராணுவ அதிகாரிகளை நெதன்யாகு ஐந்து முறை சந்தித்திருக்கிறார். இந்தச் சந்திப்பில் ஈரானின் அணு ஆயுதங்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தச் சந்திப்பை நெதன்யாகு நடத்தியிருக்கிறார்.
முன்னதாக, இம்மாத தொடக்கத்தில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘இஸ்ரேலின் செல்வந்தர் இயல் ஆஃபரின் டேங்கர் லாரியானது அரேபிய கடலில் தாக்குதலுக்கு உள்ளான பின்னணியில் ஈரான் இருக்கிறது” என குற்றம் சுமத்தியிருந்தார் . இதனால் ஈரான் – இஸ்ரேல் இடையே மோதல் வெடித்தது.
இதன் பின்னர் ஜனவரியில், இஸ்பஹானில் உள்ள ஈரானின் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு சொந்தமான ராணுவ தளத்தை இலக்காக கொண்டு வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனை இஸ்ரேல் நடத்தியதாக ஈரான் குற்றம் சுமத்தியிருந்தது.
இஸ்ரேல் – பாலஸ்தீன் விவகாரத்தில் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் மறைமுகமாக ஆயுதங்கள் வழங்கி வருவதாக இஸ்ரேல் நீண்ட காலமாகவே குற்றம் சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவும் இஸ்ரேல் – ஈரான் இடையே மோதல் போக்கு நிலவுகிறது.