நாகாலாந்து, மேகாலயாவில் தேர்தல் பிரசாரம் நிறைவு – நாளை வாக்குப்பதிவு!!
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா, நாகாலாந்து சட்டசபைகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. மேகாலயா, நாகாலாந்துக்கு நாளை (27-ம் தேதியும்) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் தேர்தல் பணிகளை கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. இதற்கான வேட்பாளர் அறிவிப்பு, பிரசாரம் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தன. சட்டசபை தேர்தலை முன்னிட்டு நாகாலாந்து, மேகாலயாவில் நேற்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன.
இந்நிலையில், நாகாலாந்து, மேகாலயாவில் நாளை (27-ம் தேதி) ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மேகாலயாவை பொருத்தமட்டில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு 11 கட்சிகளைச் சோ்ந்த 375 பேர் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க., காங்கிரஸ் கட்சிகள் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 57 தொகுதிகளிலும், திரிணாமுல் காங்கிரஸ் 56 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 12 மாவட்டங்களில் உள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு நாளை (திங்கட்கிழமை) பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாகாலாந்து, மேகாலாயவில் மொத்தமுள்ள 120 பதவிகளுக்கு 558 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மார்ச் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு வெளியாகிறது.