70வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-ந்தேதி தொண்டர்களை சந்திக்கிறார்!!
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்ச் 1-ந் தேதி 70-வது பிறந்தநாள் வருகிறது. இதையொட்டி அவர் வருகிற 1-ந் தேதி காலை 9 மணியளவில் தொண்டர் களை சந்திக்கிறார். அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையொட்டி ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பரிசு பொருட்கள் வழங்க உள்ளனர். புத்தகங்கள், வேஷ்டிகள், பழங்கள், வெள்ளி வீரவாள், ரூபாய் நோட்டு மாலைகள் உள்ளிட்ட பல்வேறு வித்தியாசமான பொருட்களை வழங்க முடிவு செய்து உள்ளனர்.
அன்றைய தினம் அண்ணா அறிவாலயத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வருவதால் அவர்களை ஒழுங்குப்படுத்துவதற்கு கலைஞர் அரங்கில் தடுப்புகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களை சந்திப்பதற்கு முன்பு தனது வீட்டில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்குகிறார். அவருக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.
அதன் பிறகு அண்ணா, கருணாநிதியின் நினைவிடத்துக்கு சென்று வணங்குகிறார். வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்றும் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். பின்னர் கோபாலபுரம் வீட்டுக்கு சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெறுகிறார். சி.ஐ.டி. காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள் வீட் டுக்கு சென்றும் ஆசி பெறுகிறார். அன்று மாலை நந்தனத்தில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்கும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள். இந்த பொதுக்கூட்டத்தை மிகப் பிரம்மாண்டமான முறையில் நடத்த தி.மு.க. முடிவு செய்துள்ளது. இதையொட்டி சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து ஏராளமான கட்சி நிர்வாகிகள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.