ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்- ஆக்ரோஷத்துடன் அடக்கிய வீரர்கள்!!
தஞ்சை அருகே உள்ள திருமலைசமுத்திரத்தில் இன்று பாரிவள்ளல் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டை கோட்டாட்சியர் ரஞ்சித் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவரது முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், கரூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். 12 சுற்றுகளாக நடந்து வருகிறது. போட்டியில் வீரர்கள் கீழே விழுந்து காயம் ஏற்படாமல் இருக்க தென்னைநார்கள் பரப்பப்பட்டு இருந்தன. முதலாவதாக கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
தொடர்ந்து வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து குதித்து களத்தில் நின்று விளையாடியது. ஆக்ரோஷத்துடன் வந்த காளைகளை வீரர்கள் அடக்கினர். பல காளைகள் வீரர்கள் நெருங்கவிடாமல் அவர்களை தூக்கி பந்தாடியது. இருப்பினும் மாடுபிடி வீரர்கள் தங்களது முழு திறமைகளை காண்பித்து காளைகளை அடக்கினர். களத்தில் விளையாடிய காளைகளின் ஆட்டத்தையும், அதனை அடக்கிய வீரர்களின் திறமைகளையும் கூடியிருந்த பார்வையாளர்கள் கரவொலி எழுப்பி ரசித்து பார்த்தனர். பலர் தங்களது செல்போன்களில் ஜல்லிக்கட்டை படம் பிடித்தனர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், அவர்களிடம் பிடிபடாமல் இருந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், சைக்கிள், பாத்திரம் உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டன. தொடர்ந்து விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. இதில் காளைகள் முட்டியதில் 15-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் காயம் அடைந்தனர். உடனடியாக அவர்களுக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் அதிகமாக இருந்த வீரர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சிசிக்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். பாதுகாப்பு பணியில் வல்லம் போலீசார் ஈடுபட்டனர்.