மெரீனாவுக்கு வாங்க நிலா சோறு சாப்பிட்டபடி தொலை நோக்கியில் நிலவையும் பார்க்கலாம்!!
நிலா நிலா ஓடிவா… நில்லாமல் ஓடிவா… என்று அம்மா பாடிக்கொண்டே இடுப்பில் இருக்கும் குழந்தைக்கு சோறு ஊட்டுவது காலம் காலமாக நம் மரபில் இருந்தது. அதே நிலாச்சோறு சாப்பிடுவது இன்று அறிவியல் பூர்வமாக புது பரிணாமத்துடன் வளர்ச்சி அடைந்துள்ளது. வருகிற 28-ந்தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி வித்தியாசமான முறையில் நிலாச் சோறு என்ற பெயரில் வானவியல் அறிவியலை மக்கள் மத்தியில் ஊட்டுவதற்கு சென்னை ஆஸ்ட்ரோ கிளப் உள்பட சில அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ளன.இன்று முதல் 4 நாட்கள் நடைபெறும் இந்த நிலாச் சோறு நிகழ்ச்சி இன்று மாலையில் மெரீனா கடற் மணற்பரப்பில் பாரதியார் சிலை அருகே நடக்கிறது. இந்த நிகழ்ச்சி பற்றி அஸ்ட்ரோ கிளப் பொதுச் செயலாளர் உதயன் கூறியதாவது:- வானியல் அறிவியல் ஆர்வத்தை தூண்டுவதற்கான ஏற்பாடுதான் இது. முதல்கட்டமாக சென்னையில் 16 இடங்களில் நடத்தப்படுகிறது. இன்று மெரினாவிலும், கிண்டியிலும் நடக்கிறது.
நாளை சில பள்ளிகளில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 9 மணிவரை நடக்கிறது. பள்ளிக்குழந்தைகள், பெரியவர்கள் என்று எல்லா தரப்பினரும் குடும்பம் குடும்பமாக வரலாம். கடற்கரையில் 4 தொலைநோக்கிகள் வைக்கப்பட்டிருக்கும். வெறும் கண்களால் பார்த்த நிலவை தொலைநோக்கி வழியாக அருகில் பார்த்து ரசிக்கலாம். நிலவை பார்க்க வருபவர்களுக்கு வழக்கப்படி நிலாசோறாக எலுமிச்சை சாதம், புளியோதரை ஏதாவது வழங்கப்படும். கலந்துகொள்பவர்கள் அவர்களாகவும் எடுத்து வரலாம். இது ஒரு மக்கள் அறிவியல் திருவிழா.
சென்னை முழுவதும் 200 இடங்களில் நடத்தப்படுகிறது. நிறைவு நாளான 28-ந்தேதி கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தின் மேல் தளத்தில் திறந்தவெளியில் நிகழ்ச்சி நடக்கிறது. எங்கெங்கு நடைபெறுகிறது என்ற விபரங்களை அறிய 9444453588 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.