ஜார்க்கண்டில் 6 மாவோயிஸ்டுகள் வெடிபொருட்களுடன் கைது!!
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருந்து வருகிறது. அவர்களை பிடித்து போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஜார்க்கண்ட் மேற்கு பகுதியில் உள்ள சிங்பூம் மாவட்டத்தில் சில மாவோயிஸ்டுகள் தங்களது கமாண்டருக்கு வெடிமருந்துகளை வழங்க செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாரிபோகாரி கிராமத்தில் சோதனை நடத்தி கிஷுன் ஹெம்ப்ராம் என்ற மாவோயிஸ்டை சுற்றி வளைத்து பிடித்தனர். அவரிடமிருந்து டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான மாவோயிஸ்டு கொடுத்த தகவலின்பேரில் டோண்டோ போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மேலும் மூன்று மாவோயிஸ்டுகளை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வெடி பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் ரெங்கரஹட்டி கிராமத்தில் சோதனை நடத்தி மாவோயிஸ்டு குழுவினர் கமாண்டர் ஜுடு கோடா, பிரிசிங் என்ற சோட்டா கோடா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் கடந்த 12-ந்தேதி சிறுகீகிர் கிராமத்தில் சாலை கட்டுமானப் பணியில் ஈடுபட்ட வாகனங்களுக்கு தீ வைத்ததை ஒப்புக் கொண்டனர். இவர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் தும்ஹாகா வனப்பகுதியில் நடந்த என்கவுண்டரிலும், 2021, 2022-ம் ஆகிய ஆண்டுகளில் நடந்த என்கவுண்டரிலும் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.