இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்க கூடாது ; வழங்கினால் போராட்டத்தில் குதிப்போம்!!
இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபகுதி கடற்றொழிலாளர்களால் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதாக, வெளியான செய்தி தொடர்பில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடபகுதி கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலிலையே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடலில்,
இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் கடற்தொழில் மேற்கொள்ள அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரியும் நேரில் சந்தித்து பேச வாய்ப்பு தருமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோருவது.
ஐனாதிபதியிடம் இருந்து, கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்காது விட்டால் வடபகுதி கடற்றொழிலாளர்கள் அனைவரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது.
அத்துடன் நாடாளுமன்றில் பேசிய வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இலங்கை கடற்பரப்பில் அனுமதி வழங்கும் முறைமையை பரிசீலிப்பதாக தெரிவித்தமை ஏற்றுக்கொள்ள முடியாது.
புனித ஸ்தலமான கச்சதீவினை கடற்றொழிலாளர்கள் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பேச்சுக்களை நடாத்த அனுமதிக்க கூடாது என யாழ் மறை மாவட்ட ஆயரிடம் ஊடகங்கள் வாயிலாக கோருவது போன்ற முடிவுகள் இந்த கலந்துரையாடலில் எட்டப்பட்டுள்ளன.