காட்டு யானைகளினால் உயிருக்கு அச்சுறுத்தல் – கிளிநொச்சி, கல்மடு நகர் மக்கள் கவலை தெரிவிப்பு!!
கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடு நகர் பகுதியில் தொடரும் காட்டு யானை அச்சுறுத்தல் காரணமாக தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் தினமும் மக்கள் குடியிருப்புக்குள் காட்டு யானை புகுந்து, மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருவதுடன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுத் தளபாடம் மற்றும் வீடொன்றின் கூரை என்பனவற்றை அடித்து உடைத்துள்ளது.
அத்துடன் வாழ்வாதாரத்துக்காக வைக்கப்பட்ட 24 தென்னை மரங்கள், 1/2 ஏக்கர் வாழைச்செய்கை என்பவற்றை யானை அழித்துள்ளது என பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இப்பகுதி கல்மடு நகர் கிராம அலுவலருக்கு தெரிவித்திருந்தபோதிலும், அவர் இதுவரை குறித்த இடத்துக்கு வந்து நிலைமையை அவதானிக்கவில்லை எனவும் அந்த மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் தமது பகுதிகளில் தொடர்ச்சியாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், இது தொடர்பாக எந்தவொரு அதிகாரியும் கவனம் செலுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் எமது பகுதியின் கிராம அலுவலர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது தற்காலிக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் யானை வெடியினை எமக்களித்து உதவ வேண்டும். விரைவில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாதிப்புக்குள்ளான அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.