;
Athirady Tamil News

மன்னாரில் நெல்லுக்குரிய விலையும் விளைச்சலுமின்றி செய்வதறியாது திண்டாடும் விவசாயிகள்!!

0

மன்னார் மாவட்டத்தில் கடந்த வருட இறுதியில் மேற்கொள்ளப்பட்ட காலபோக செய்கையின் அறுவடை தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில் ஏக்கருக்கு 30 மூடை விளைச்சல் கிடைத்த வயல்களில் இம்முறை 8-15 மூடை விளைச்சலே கிடைத்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, மாந்தை மேற்கு பகுதியில் உள்ள இலுப்பை கடவை, விடத்தல் தீவு, ஆட்காட்டிவெளி, கமநல சேவைகள் நிலைய எல்லைக்குள் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளைச்சல் இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை மாந்தை பகுதியை சேர்ந்த 3900 விவசாயிகள் 15,213 ஏக்கர் விவசாய செய்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் மஞ்சள் நோய் தாக்கம், போதியளவு நீர் உரிய நேரத்தில் கிடைக்காமை, கிருமிநாசினி, களைநாசினிகளின் விலை அதிகரிப்பு போன்ற காரணங்களால் உரிய விளைச்சல் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏக்கருக்கு ஒன்றரை லட்சத்துக்கு மேல் செலவு செய்து விவசாய செய்கை மேற்கொண்ட நிலையில் ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாவுக்கு குறைவான தொகையே கிடைத்துள்ளதாகவும், ஏக்கருக்கு ஒரு லட்சத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

காலநிலை பிரச்சினை, உரிய நேரத்துக்கு பசளை கிடைக்காமை, மருந்து விலை ஏற்றம் என்பவற்றால் இம்முறை கடுமையாக விளைச்சல் குறைவடைந்துள்ளது என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறகின்றனர்.

இம்முறை டீசல் விலை அதிகரிப்பு, பசளை விலை அதிகரிப்பு, கிருமிநாசினி விலை அதிகரிப்பு, வெட்டுக்கூலி அதிகரிப்பு, உழவு கூலி அதிகரிப்பு என அனைத்து விலைகளும் அதிகரித்துள்ள நிலையில் நெல்லின் விலை மாத்திரம் அதிகரிக்கப்படாமலும் நிர்ணயிக்கப்படாமலும் இருப்பதால் விவசாயத்தை விட்டுவிட்டு, கூலித் தொழில் செய்யவேண்டிய நிலைக்கு தாங்கள் தள்ளப்பட்டுள்ளதாக கோவில் குளம் பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டு பாதிப்புக்குள்ளான விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் உர பிரச்சினையால் ஏற்பட்ட நஷ்டத்துக்கே அரசாங்கம் உரிய நஷ்ட ஈடு வழங்காத நிலையில் இம்முறையாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, விவசாயிகளை காப்பாற்ற முன்வர வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் மன்னாரில் உள்ள பிரதேச செயலகங்களினால் நெல் கொள்வனவு இடம்பெற்றாலும், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் நெல்லை கொள்வனவு செய்வதால் விவசாயிகள், தனியார் கொள்வனவாளர்களால் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்படுகின்ற குறைந்த விலைக்கே நெல்லை விற்பனை செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.