பாகிஸ்தானில் உள்ள பாலகோட் தாக்குதலின் 4-ம் ஆண்டு தினம்: 200 தீவிரவாதிகள் கொல்லப்பட்டது எப்படி?
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் 50 கி.மீ. ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலின் 4-வது ஆண்டு தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதுகுறித்து விமானப்படை வட்டாரங்கள் கூறியதாவது:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அடுத்த 3 மணி நேரத்துக்குள் ராணுவ தரப்பில் திட்டம் தீட்டப்பட்டது. இதன்படி பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தின் பாலகோட் பகுதிகளில் செயல்படும் தீவிரவாத முகாம்களை கூண்டோடு அழிக்க வியூகம் வகுக்கப்பட்டது.
கடந்த 2019 பிப்ரவரி 16-ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ஒப்புதல் அளிக்கப்பட் டது. இதன்படி கடந்த 2019 பிப்ரவரி 26-ம் தேதி ம.பி. குவாலியர் விமானப்படைத் தளத்தில் இருந்து அதிகாலை நேரத்தில் மிராஜ் 2000 ரகத்தை சேர்ந்த 20 போர் விமானங்கள் புறப்பட்டன. இதில் 12 போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவின. அந்த நாட்டு ராணுவ ரேடார் கண்களில் மண்ணை தூவிவிட்டு ஊடுருவிய இந்திய போர் விமானங்கள் அதிகாலை 3.45 மணிக்கு பால கோட், முஷாபராபாத், சாகோட்டி பகுதிகளில் தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசின.
இதன்மூலம் 21 நிமிடங்களில் அப்பகுதியில் செயல்பட்ட அனைத்து தீவிரவாத முகாம்களும் அழிக்கப்பட்டன. சுமார் 200-க்கும்மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதன்பிறகு இந்திய போர் விமானங்கள் பத்திரமாக திரும்பின.
இவ்வாறு விமானப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.