இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது – டக்ளஸ்!!
இந்தியக் கடற்றொழிலாளர்கள் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கான அனுமதிகளை வழங்குவது தொடர்பாக தீர்மானங்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
இலங்கை கடற்றொழிலாளர்களை பாதிக்கும் வகையிலான எவ்வாறான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மேலும், குறுகிய சுயலாப நலன்களுக்காக சில தரப்புக்கள் தவறான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பி வருவதாக குற்றஞ்சாட்டியுள்ள கடற்றொழில் அமைச்சர், கடந்த காலங்களில் சீனாவினால் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதாக கிளப்பிவிடப்பட்ட புரளிகள் தோற்றுப் போன நிலையில், இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி அளிக்கப் போகின்றது என்ற கதைகளை கூற ஆரம்பித்துள்ளதாகவும், இவ்வாறான புரளிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதேவேளை, இந்தியக் கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய எல்லை தாண்டிய சட்டவிரோத தொழில் முறையை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.