;
Athirady Tamil News

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை தொடர இந்தியா- இங்கிலாந்து முடிவு!!

0

இங்கிலாந்து -இந்தியா இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை தொடர இருதரப்பும் ஒப்பு கொண்டுள்ளன. இந்தியா-இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை கடந்த அக்டோபருக்குள் இறுதி செய்ய முந்தைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்காக இந்திய, இங்கிலாந்து அதிகாரிகள் மட்டத்திலான பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால், தரவுகளை உள்ளூர் மயமாக்குதல், இங்கிலாந்து நிறுவனங்களை ஒன்றிய அரசின் ஒப்பந்தங்களை ஏலம் எடுக்க அனுமதிப்பது ஆகியவற்றில் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை.

இந்நிலையில், ஜி-20 நாடுகளில் நிதியமைச்சர்களின் மாநாடு சமீபத்தில் பெங்களூருவில் நடந்தது. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த மாநாட்டில் இங்கிலாந்தின் நிதியமைச்சர் ஜெர்மீ ஹன்ட் கலந்து கொண்டார். அவர் பெங்களூருவில் தொழிலதிபர்களை சந்தித்து பேசினார். மேலும் பிரபல பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ அலுவலகத்துக்கும் சென்று அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து ஜெர்மீ ஹன்ட் கூறுகையில், ‘‘கடந்த 38 ஆண்டுகளுக்கு முன் முதல்முதலில் இந்தியாவுக்கு வந்தேன். அப்போது இருந்ததை விட தற்போது ஏராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவின் அசுர வளர்ச்சி குறித்து ஏராளமான பாடங்கள் கற்க வேண்டியுள்ளது’’ என்றார்.

இந்நிலையில், இங்கிலாந்து நிதித்துறை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவது குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஜெர்மீ ஹன்ட் பேச்சுவார்த்தை நடத்தினார். இங்கிலாந்து- இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையை முன்னோக்கி எடுத்து செல்வதற்கு இரு தரப்பும் ஒப்பு கொண்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.