பா.ஜனதா, எனது அனுபவத்தை பயன்படுத்த வில்லை: ஜெகதீஷ் ஷெட்டர் வேதனை!!
முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கர்நாடக மக்கள் பிரதமர் மோடியின் தலைமையை விரும்புகிறார்கள். கர்நாடகத்தில் ஆளுங்கட்சிக்கு எதிரான மக்களின் மனநிலை இருக்கும். எந்த கட்சியின் ஆட்சி நடைபெற்றாலும், ஆளுங்கட்சிக்கு எதிரான போக்கு இருப்பது சகஜம். 60 சதவீத பணிகளை செய்து முடித்தாலும், செய்ய முடியாத பணிகள் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்துவார்கள்.
காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் பலவீனம் அடைந்துவிட்டது. கர்நாடகத்தில் அக்கட்சியில் தலைவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார். மேலும் அவர் கட்சியை பலப்படுத்தி மீண்டும் ஆட்சியில் அமர வைக்க பாடுபடப்போவதாக கூறியுள்ளார்.
முதல்-மந்திரி வேட்பாளர் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும். எனக்கு கவா்னர் ஆகும் ஆசை இல்லை. வருகிற சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன். எனது அனுபவத்தை, கட்சியை பலப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்தி கொள்ளுமாறு கூறினேன். ஆனால் என்னை கட்சி முழுமையாக பயன்படுத்தி கொள்ளவில்லை என்று நினைக்க தோன்றுகிறது.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மோதல் விவகாரத்தில் ஒழுங்கீனமாக செயல்படும் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜனதா தளம்(எஸ்) கட்சி சில மாவட்டங்களில் மட்டுமே உள்ளன. அந்த கட்சியால் பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் தான் ஏற்படுகிறது. பா.ஜனதா, காங்கிரஸ் இடையே போட்டி உள்ள தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) போட்டியிடும்போது, அது பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும். இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.