;
Athirady Tamil News

உத்தவ் தாக்கரே, சரத்பவார் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள்: ஓவைசி!!

0

எம்.ஐ.எம். கட்சியின் பொதுக்கூட்டம் தானே மாவட்டம் மும்ரா பகுதியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் ஓவைசி உத்தவ் தாக்கரே, சரத்பவார் போன்றவர்கள் தேவையான நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள் என கூறினார். மேலும் அவர் பேசியதாவது:- அஜித்பவார், சுப்ரியா சுலே, சரத்பவார், உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேவேந்திர பட்னாவிசால் தலைவராக முடியும் போது, உங்களால் ஏன் முடியாது?. எம்.ஐ.எம். கட்சி 65 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அப்போது கட்சி கூட்டங்களில் குறைவான மக்களே கலந்து கொள்வார்கள். தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் நமது கட்சியினர் உள்ளனர். இந்த வளர்ச்சி தொடர வேண்டும்.

இளைஞர்கள் நிர்வாகத்திற்குள்ளும் நுழைய முயற்சி செய்ய வேண்டும். தேர்தல் மூலமாகவும் நிர்வாகத்துக்குள் செல்ல வேண்டும். இஸ்லாமியர்கள், தலித்துகளுக்காக போராட இளைஞர்கள் எம்.ஐ.எம். கட்சியை பலப்படுத்த வேண்டும். நமது மதத்தினருக்கு எதிரான சம்பவங்கள் நடந்த போது உத்தவ் தாக்கரே ஏன் அமைதியாக இருந்தார். சரத்பவார் பிரதமர் மோடியை தோற்கடிக்க விரும்புகிறார். அதற்காக அவருக்கு நமது ஆதரவு தேவைப்படுகிறது. ஆனால் நமக்கு தேவையான நேரத்தில் உதவி செய்ய அவர்கள் மறந்துவிடுவர். நமது விதி என, நம்மை அவர்கள் விட்டுவிடுவர்.

இது என்ன மாதிரியான மதச்சார்பின்மை. காங்கிரஸ் தலைவர்களுக்கு பாரத் ஜோடா யாத்திரைக்கு நேரம் இருக்கிறது. ஆனால் கும்பலால் கொலை செய்யப்படும் நமது மக்களை சந்திக்க அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை. தங்களின் கோட்டை என நினைப்பவர்களுக்கு எதிராக எம்.ஐ.எம். பலமான வேட்பாளர்களை நிறுத்தும்.

உங்களால் எல்லோரையும் பணம் கொடுத்து வாங்க முடியாது. எங்களுக்கு விசுவாசமாக உள்ளவர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை வைத்து நான் உங்களை தோற்கடிப்பேன். பண பலத்தால் எங்களை நீங்கள் வாங்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.