துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு!!
துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. மலாத்யா மாகாணத்தின் யெஸில்யுர்த் நகரில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக துருக்கி பேரிடர் மேலாண்மை முகமை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விரிசல் விட்டிருந்த பல கட்டடங்கள் தற்போதைய நிலநடுக்கத்தால் விழுந்து நொறுங்கின. துருக்கி, சிரியா எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் பிப்ரவரி .6ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தில் 1.73 லட்சம் கட்டடங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள், அலுவலகங்கள் இடிந்து மண்ணில் புதைந்தன. உயிரிழந்தோர் எண்ணிக்கை 46,000-ஐ கடந்தது. அதன் மீட்பு பணிகள் ஓரளவுக்கு முடிந்த நிலையில், மீண்டும் துருக்கியின் மலாத்யா மாகாணத்தின் யெஸில்யுர்த் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் 5.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக துருக்கி பேரிடர் மேலாண்மை முகமை தகவல் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்தில் விரிசல் விட்டிருந்த பல கட்டடங்கள் தற்போதைய நிலநடுக்கத்தால் விழுந்து நொறுங்கியதால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். பிப்ரவரி.6-ல் ஏற்பட்ட பலத்த நிலநடுக்கத்தை தொடர்ந்து துருக்கியில் இதுவரை 10,000 பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.