நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு எதிரொலி: துருக்கி அரசே ராஜினாமா செய்!..கால்பந்து ஸ்டேடியத்தில் ரசிகர்கள் கோஷம்!!
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர். அவர்களில் துருக்கியில் மட்டும் 44,000 பேர் பலியாகினர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், முக்கிய நகரமான இஸ்தான்புல்லில் கொன்யாஸ்போர் – பெசிக்டாஸ் உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டிகளுக்கு மத்தியில் ஸ்டேடியத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள், துருக்கி அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ‘துருக்கி அரசே ராஜினாமா செய்; 20 ஆண்டுகளாக பொய்களை பேசி வருகின்றீர்கள்; மக்களை ஏமாற்றுகின்றீர்கள்.
எனவே ராஜினாமா செய்யுங்கள்’ என்று கோஷங்களை எழுப்பிதால் பரபரப்பு நிலவியது. மேலும் அவர்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நினைவாக நூற்றுக்கணக்கான பொம்மைகளை ஆடுகளத்தில் வீசி எறிந்தனர். துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக ஆளும் அரசு அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்பதால் மக்கள் கோபத்தில் உள்ளனர். மேலும், வரும் மே 14ம் தேதி குடியரசுத் தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பு தேர்தலில் எதிரொலிக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.