அமெரிக்கா அதிபர் போட்டியில் களமிறங்கவுள்ள தென்னிந்தியர் – வாய் சவடால் செய்யும் ட்ரம்ப்..!
இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 37 வயது விவேக் ராமசாமி, அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான போட்டியில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு போட்டியாக களமிறங்கியுள்ளார்.
இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களில் ஒருவராக அயோவாவில் இருந்து களம் காண்கிறார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் வடக்காஞ்சேரி பகுதியை சேர்ந்த ராமசாமி மற்றும் கீதா தம்பதியின் இரு மகன்களில் ஒருவரான விவேக் ராமசாமி சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
டென்னிஸ் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்ட விவேக், கொரோனா பெருந்தொற்றின் போது சில மாத காலம் முழு நேர தந்தையாக செயல்பட்டேன் என்பதை வேடிக்கையாக கூறுகிறார்.
அந்த வேளையில், தமது மனைவி நியூயார்க் மருத்துவமனையில் பணியாற்றும் சூழல் ஏற்பட்டது என்பதையும் விவேக் சுட்டிக்காட்டியுள்ளார். நாடு எதிர்கொள்ளும் சவால்களை குடியரசுக் கட்சியின் இன்னொரு வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் சமாளிக்க முடியாது எனவும், அதற்கான திட்டமிடல் அவரிடம் இல்லை எனவும் விவேக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவை முதன்மை நாடாக உருவாக்க வேண்டும் என்றால், டொனால்ட் ட்ரம்ப் போன்று வெறும் வாய் சவடால் போதாது எனவும், முதலில் அமெரிக்கா என்றால் என்ன என்பதை நாம் கண்டுணர வேண்டும் எனவும் விவேக் தெரிவித்துள்ளார்.
குடியரசுக் கட்சியை பொறுத்தமட்டில் தங்கள் முதல் வெற்றியை அயோவா மாகாணத்தில் இருந்து துவங்கவே ஆசைப்படுகிறார்கள். ஜனநாயக கட்சியினர் சமீப ஆண்டுகளாக தென் கரோலினா மாகாணத்தை தங்களின் கோட்டையாக உருமாற்றி வருகின்றனர் என விவேக் தெரிவித்துள்ளார்
பாலக்காடு பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு குடியேறிய விவேக்கின் தந்தை ராமசாமி General Electric நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றியுள்ளார், தாயார் முதியோர் மனநல மருத்துவராக பணியாற்றியுள்ளார்.
1985ல் ஓஹியோவின் சின்சினாட்டி பகுதியில் பிறந்த விவேக், 2003 ல் உயர்நிலைப் பள்ளி படிப்பில் சாதனை படைத்ததுடன், தேசிய அளவில் இளையோருக்கான டென்னிஸ் வீரர் தரவரிசையிலும் இடம் பெற்றார்.
2007 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் உயிரியல் படிப்பை முடித்த விவேக், 2013ல் யேல் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார்.