ஆற்றுக்கால் பகவதியம்மன் கோவில் பொங்கல் விழா 7-ந்தேதி நடக்கிறது!!
கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா வருகிற 27-ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் செயற்குழு உறுப்பினர்கள் சந்தீப்குமார், நந்தகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:- ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வருகிற 27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டி குடியிருத்தும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கொடியேற்றமும் நடைபெறும். வரலாற்று சிறப்பு மிக்க பொங்கல் விழா அடுத்த மாதம் (மார்ச்) 7-ந் தேதி நடைபெறும்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான குத்தியோட்டம், தாலப்பொலி நிகழ்வுக்காக திருவிழாவின் 3-வது நாள் குழந்தைகள் விரதம் தொடங்குகின்றனர். முன்பு 6 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு குத்தியோட்டம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு 10 வயது முதல் 12 வயது வரை உள்ள 743 சிறுவர்கள் குத்தியோட்டம் நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.
8-ந் தேதி இரவு 9.15 மணிக்கு காப்பு அவிழ்த்து குடியிறக்கிய பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு நடக்கும் குருதி தர்ப்பணத்துடன் திருவிழா நிறைவுபெறும். ஆற்றுக்கால் பொங்கல் விழா அன்று காலை 10.30 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டப்படுவதை தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பொங்கலிடுவார்கள். 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பொங்கல் விழா பெரிய அளவில் நடைபெறவில்லை. அவரவர் வீடுகளில் பக்தர்கள் பொங்கலிட்டனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு பொங்கல் விழா நடைபெறுவதால் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்க்கிறோம். திருவிழா தொடங்கும் அன்று மாலை 6 மணிக்கு கலை நிகழ்ச்சிகளை சினிமா நடிகர் உண்ணி முகுந்தன் தொடங்கி வைக்கிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.