கர்நாடகாவில் ரூ.384 கோடியில் புதிய விமான நிலையம்- பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்!!
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் ரூ.384 கோடி செலவில் 775 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3,200 மீட்டர் தூரத்திற்கு ஓடுதளத்துடன் இரவில் விமானங்கள் தரையிறங்கும் வசதி இடம் பெற்றுள்ளது. இது கர்நாடகத்தில், பெங்களூருவுக்கு அடுத்தபடியாக 2-வது பெரிய விமான நிலையம் ஆகும். இந்த விமான நிலையம் தாமரை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார்.
இதற்காக தனி விமானம் மூலம் கர்நாடக மாநிலம் சிவமொக்காவுக்கு வந்த அவரை கர்நாடக மாநில முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வரவேற்றார். பின்பு பிரதமர் மோடி புதிய விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார். அதைத்தொடர்ந்து அவர் ரூ.990 கோடியில் சிவமொக்கா-சிகாரிப்புரா-ராணிபென்னூர் புதிய ரெயில் வழித்தடத்திற்கும், ரூ.100 கோடியில் கோட்டேகன்குரு ரெயில் பெட்டி பணிமனை மையத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பைந்தூர்-ராணிபென்னூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் சிகாரிப்புராவில் புறவழிச்சாலை அமைக்கும் திட்டம் உள்பட பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கும் மோடி அடிக்கல் நாட்டினார். தீர்த்தஹள்ளி தாலுகா பாரதிபுராவில் புதிய பாலம் கட்டும் பணியும் தொடங்கப்பட்டது. மேலும் ரூ.950 கோடியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் 127 கிராமங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணி ரூ.860 கோடியில் மேலும் 3 திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இவற்றின் மூலம் 4.4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ரூ.895 கோடியில் சிவமொக்காவில் சீர்மிகு நகர் திட்டத்தில் 4 திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.