உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!!
நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களையும் மற்றும் பிற உதவிகளையும் வாரி வழங்கி வருகின்றன. போர் முடிவில்லாமல் தொடர்வதற்கு இதுவும் ஒரு காரணம் என சர்வதேச அளவில் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
உக்ரைன்-ரஷியா போர் ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள நிலையில் பல நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க எதிர்ப்பு கிளம்பியுள்ளது. குறிப்பாக பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி மக்கள் போராட தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், பிரான்சில் தலைநகர் பாரீஸ் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினா். குறிப்பாக பாரீசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தினர். அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், ‘போர் வேண்டாம், அமைதி வேண்டும்’, ‘மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்’ ‘நேட்டோவை விட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் அடங்கி பதாகைகளை சுமந்தபடியும் பேரணியாகச் சென்றனர்.