வருகிற 22-ந்தேதி முதல் கிராமப்புறங்களில் 2 நாள் இரவு தங்கி ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வு செய்கிறார்!!
ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி இருந்து ஆய்வு நடத்தி வந்தார். அப்போது அவர் கிராமப்புற மக்களிடம் நெருங்கி பழகி ஆட்சியில் உள்ள குறை நிறைகளை கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் நல திட்டங்களை அறிவித்து நிறைவேற்றிவந்தார். ஹெலிகாப்டரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ராஜசேகர் ரெட்டி இறந்தார். அவரது இறப்பிற்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
பின்னர் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். தெலுங்கு தேசம் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதையடுத்து ஜெகன்மோகன் ரெட்டி, அவரது தங்கை ஷர்மிளா, மனைவி பாரதி, அவரது தாயார் உள்ளிட்டோர் ஆந்திரா முழுவதும் நடைபயணம் மேற்கொண்டனர். அப்போது ஓ.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தனது தந்தையைப் போல் வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி அப்பகுதி மக்களின் கோரிக்கைகளை கேட்டு நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தார்.
பின்னர் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியைப் பிடித்தார். கொரோனா தொற்று பரவல் காரணமாக அவர் பொது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை. தற்போது ஆந்திராவில் உள்ள எதிர்க்கட்சிகள் ஜெகன்மோகன் ஆட்சியின் மீது குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பிரசாரத்தை நடத்தி வருகின்றனர். ஆந்திர சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒரு ஆண்டு மட்டுமே உள்ளதால் மீண்டும் ஆட்சியில் தக்க வைத்துக் கொள்ள தனது தந்தையை போல் கிராமப்புறங்களில் தங்கி ஆய்வு செய்ய ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.
அதன்படி மார்ச் 22-ந் தேதி முதல் புதன், வியாழக்கிழமை என 2 நாள் இரவு கிராமப்புறங்களில் தங்கி மக்களை சந்தித்து தனது ஆட்சியில் உள்ள குறை நிறைகளை கேட்க உள்ளார். மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு திட்டங்களை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். மற்ற நாட்களில் விசாகப்பட்டினத்தில் உள்ள கோர்ட் டிரஸ்ட் விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்து அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.