;
Athirady Tamil News

எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் சபாநாயகரைச் சந்தித்தனர் !!

0

மக்கள் இறையாண்மைக்காக மூன்று விசேட கோரிக்கைகளும் முன்வைப்பு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துதல் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட மூன்று விசேட கோரிக்கைகள் அடங்களாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் குழுவினர் இன்று(28) காலை பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தனர்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலை நடத்துவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக விடுவிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற எதிர்க்கட்சித் தலைவரால் சபாநாயகரிடம் முன்மொழியப்பட்டதோடு சபாநாயகர் இதற்கு தனது உடன்பாட்டை தெரிவித்தார்.

தேர்தலுக்கு பணம் விடுவிக்கப்படாதது குறித்து நிதியமைச்சின் செயலாளரை அழைத்து கேள்வி எழுப்புமாறும்,தற்போதைய பாரதூரமான நிலைமை நடுவீதியை எட்டியுள்ளதுடன்,அண்மையில் தேர்தலை நடத்துமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,எதிர்காலத்தில் இது மேலும் மோசமடையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே,நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தின் அதிகாரங்களின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட நிதிசார் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் நசுக்கப்பட்டால் பாராளுமன்றம் என்ற ஒன்று ஏன் என கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சித் தலைவர்,தேர்தல் ஆணைக்குழுவின் ஐந்து உறுப்பினர்களும் ஏகமனதாக தேர்தலை அறிவித்தனர் எனவும்,வர்த்தமானி மூலம் திகதிகள் குறிக்கப்பட்டதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,சர்வாதிகாரத்திற்கான பயணத்திற்கே ஜனாதிபதி தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்த யாருக்கும் உரிமை இல்லை எனவும்,இந்த நிலையை மாற்றும் அதிகாரம் கொண்ட பிரதிநிதிதான் சபாநாயகர் ஆவர் என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இங்கு தெரிவித்தார்.

மாகாண சபைகள் தற்போது செயலிழந்துள்ளதாகவும்,அதன் அதிகாரம் ஜனாதிபதியின் பிரதிநிதியின் கைகளில் உள்ளதாகவும்,எதிர்காலத்தில்,உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையும் ஜனாதிபதியின் பிரதிநிதியின் கைகளுக்கு மாறும் எனவும், இதன் ஊடாக மக்கள் பிரதிநிதிகள் ஜனாதிபதியால் தடுப்புக் காவலில் வைக்கப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இங்கு தெரிவித்தார்.

இந்நிலைமைகளைக் கருத்திற் கொண்டு நாளை கட்சித் தலைவர்களின் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்க முடியும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு நிதியமைச்சின் செயலாளரை அழைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்க முடியும் என சபாநாயகர் தெரிவித்தார்.என்றாலும்,நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி வெளிப்படையாக விதிமீறலுக்குட்பட்டால் அது குறித்து விவாதத்திற்கு அழைக்கும் உரிமை சபாநாயகர் சார்ந்தே உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.