பிரதமர் மோடியுடன் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப் கவர்னருமான பன்வாரிலால் புரோகித் பேத்தி பூஜா-சிவம் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து இன்று மதியம் 1 மணியளவில் மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஸ்ரீகிரிராஜ் சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பஞ்சாயத்து ராஜ் திட்டங் களின் முன்னேற்றம் தொடர்பாக விவரித்து பேசினார். இந்நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். அமைச்சரான பிறகு உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திப்பதால் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பா.ஜ.கவுக்கும் தி.மு.க.வுக்கும் இடையே கருத்து வேறுபாடு- மோதல் நிலவி வரும் சூழலில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் மோடியை தனியாக சென்று சந்தித்து பேசுவது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்திய அரசுக்கும்- தி.மு.க. அரசுக்கும் இடையே நிலவி வரும் பகைமை இதன் மூலம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு காரணமாக தமிழக அரசுக்கும்- மத்திய அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் உருவாகும் பட்சத்தில் தமிழகத்திற்கு தேவையான திட்டங்களுக்கு அதிக நிதி கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.