2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாற தொழில்நுட்பம் உதவும்: பிரதமர் மோடி!!
பிரதமர் மோடி இன்று `தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எளிதாக வாழ்வது, என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்கு பிந்தைய இணைய பேரவையில் காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை என்பதன் அடிப்படையாக தொழில்நுட்பம் இருந்தது. இதன் காரணமாக பல ஏழைகள் ரேசன் பொருட்களை வெளிப்படையான முறையில் பெற தொடங்கினர். ஏழைகளுக்கு நன்மைகளை வழங்குவதற்கு ஜன் தன் யோஜனா, ஆதார், செல்போன் எண் ஆகிய மும்மூர்த்திகள் உதவின. இவைகள் மூலம் பயனாளிகளின் கணக்கிற்கு நேரடியாக பணத்தை அனுப்ப உதவியது.
சேவையின் உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்ய பல துறைகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். புதிய இந்தியா தனது குடிமக்களை தொழில்நுட்பத்துடன் இணைத்து மேம்படுத்துகிறது. அரசின் பட்ஜெட்டில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் எளிதாக வாழ்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களது முயற்சிகள், ஏழைகள் மற்றும் வசதியற்றவர்களின் வாழ்க்கையை சிறப்பாக்குகின்றன. இன்று அரசாங்கத்தை மக்கள் ஒரு தடையாக கருதவில்லை.
வளர்ச்சிக்கானதாக கருதுகிறார்கள். பட்ஜெட்டில் தொழில்நுட்பம், மனிதத்தொடர்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. கொரோனா தொற்றின்போது கோவின் தளம் முக்கிய பங்காற்றியது. இன்று இந்த மாற்றத்தை இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தெளிவாக உணர்கிறார்கள். தற்போது அரசாங்கத்துடன் தொடர்பு கொள்வது மிகவும் எளிதானது. வரி செலுத்துவோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண தொழில்நுட்பத்தை பயன்படுத்தினோம்.
டிஜிட்டல் புரட்சியின் பலன் அனைவரையும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் நவீன டிஜிட்டல் உள் கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் 10 பிரச்சினைகளை செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்க்கும் வழிகளை கண்டறிய வேண்டும். 21-ம் நூற்றாண்டு தொழில்நுட்பம் சார்ந்தது. டிஜிட்டல், இணைய தொழில்நுட்பம் என்று மட்டும் கட்டுப்படுத்த முடியாது.
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கான இலக்கை அடைய தொழில் நுட்பம் உதவும். 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் விவாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவைகள் மருத்துவம், கல்வி, விவசாயம் மற்றும் பல துறைகளை மாற்றுவதற்கு தயாராக உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.