உக்ரைன் பதிலடியா? ரஷ்யா மீது சரமாரியாக டிரோன்கள் தாக்குதல்!!
ரஷ்யா மீது நேற்று சரமாரியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2737 கோடி உளவு விமானம் தகர்க்கப்பட்டது. டிவி, ரேடியோக்கள் ஹேக் செய்யப்பட்டன. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் ஒரு ஆண்டை கடந்து விட்டது. இருதரப்பிலும் சேதங்கள் அதிகம். தற்போது உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பகிரங்கமாக உதவி வருகின்றன. இந்தநிலையில் நேற்று திடீரென ரஷ்யா முழுவதும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த திடீர் தாக்குதலில் பெலாரஸில் உள்ள ரஷ்ய விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டு இருந்த உளவு விமானம் இரண்டு டிரோன்கள் மூலம் அழிக்கப்பட்டது. இந்த விமானம் 2,737 கோடி மதிப்பு உள்ளதாகும். உக்ரைனுக்கு ஆதரவான பெலாரஸில் உள்ளவர்களால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதில் ராணுவ சரக்கு விமானம், பனி அகற்றும் எந்திரங்களும் தகர்க்கப்பட்டன.
பெலாரசில் தாக்குதல் நடத்திய தகவல் கிடைத்ததும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள புல்கோவோ விமான நிலையத்தை தற்காலிகமாக மூடுவதாக ரஷ்யா அறிவித்தது. இருப்பினும் சில மணி நேரங்களுக்குப் பிறகு மீண்டும் புல்கோவோ ஏர்போர்ட் திறக்கப்பட்டது. அதை சுற்றி வந்த டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. தெற்கு மற்றும் மேற்கு ரஷ்யாவில் தொடர்ந்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடந்தது. இந்த நேரத்தில் ரஷ்ய டிவி சேனல்கள், வானொலி நிலையங்கள் ஹேக்கிங் செய்யப்பட்டன. ஒரு டிரோன் மாஸ்கோவில்இருந்து 100 கிமீ தொலைவில் உள்ள குபாஸ்டோவோ கிராமத்தின் அருகே விழுந்தது. இதையடுத்து உக்ரைன் எல்லையில் பாதுகாப்பை கடுமையாக்குமாறு அதிபர் புதின் வலியுறுத்தினார்.