பெண்களுக்கு எதிரான கொடுமைகள் இந்தியாவில் அதிகம்: பதவி ஏற்ற பின் குஷ்பு பேட்டி!!
பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு சென்று பதவி ஏற்றுக்கொண்டார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இதை புது தொடக்கமாக உணர்கிறேன். பெண்களுக்காக போராடி, குரல் கொடுத்து பேசி வரும் எனக்கு அங்கீகாரம் வழங்கியது போல் உள்ளது. பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
பெண்களுக்காக செய்ய விரும்புவதை செய்யவும், அவர்களுக்காக பேச, அவர்களுக்கு தைரியம் கொடுக்க மிகப்பெரிய தளம் கிடைத்ததில் மகிழ்ச்சி. பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கிருந்து தொடங்குகிறது? என்பதை பார்க்க வேண்டும். இது டெல்லியில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. ஏன் இப்படி பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது, அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, எப்படி தடுப்பது? என்பதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நான் இப்போதுதான் பதவி ஏற்று இருக்கிறேன். இங்கு பல புகார்கள் ஏற்கனவே இருக்கிறது. அந்த ஆவணங்களை படித்துப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள் வாயிலாக வெளியே வரும் வன்கொடுமைகள் மட்டுமே வெளி உலகத்துக்கு தெரிகிறது. வெளியே தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன. பாதிக்கப்படும் பெண்கள் போலீசுக்கு செல்லவோ, கோர்ட்டுக்கு செல்லவோ பயப்படுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லுவது, ‘நாங்கள் இருக்கிறோம்.
எங்களிடம் வாருங்கள்’ என்பதுதான். தேசிய மகளிர் ஆணையம் வலுவான அமைப்பு. பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும். தமிழகத்தில் இருந்து என்னை தேர்ந்தெடுத்து உள்ளனர். அதனால் கண்டிப்பாக தமிழக பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை அதிகம் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார்.