மத்திய பெருவில் உள்ள சிவியா பகுதியில் பயங்கர நிலச்சரிவு: 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன.. மக்கள் பீதி..!!
பெரு நாட்டின் சிவியா பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மக்கள் பீதியடைந்தனர். அயச்சச்சோ அருகே சிவியா என்ற இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகளும், விளைநிலங்களும் மண்ணில் புதைந்தன. 10 வீடுகள், பல ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த காப்பி, கோக்கோ, வாழை உள்ளிட்ட பயிர்கள் மண்ணிற்குள் சென்றன. இந்த நிலச்சரிவில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இடிபாடுகளை அகற்றும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலச்சரிவை நேரில் கண்டவர்கள் பெரும் அச்சமடைந்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பெருவில் ஜக்ரா மற்றும் பவுசா ஆகிய நகரங்களை இணைக்கும் மலைப்பாதையில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்த போது, சில சிறிய பாறைகள் சரிந்து பாதையில் விழுந்துள்ளன. பிறகு மலையின் ஒரு பகுதி திடீரென சரிந்து டன் கணக்கான பாறைகளும் மணலும் பாதையில் விழுந்தன. முன்னெச்சரிக்கையாக வாகனங்களை ஓட்டுநர்கள் பாதுகாப்பான தூரத்தில் நிறுத்தி விட்டதால் நல்வாய்ப்பாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. நிலச்சரிவு ஏற்பட்ட வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவுகூரத்தக்கது.