பிரபாகரன் இல்லையெனில் மீனவர்கள் மீது கெடுபிடி ஏன் ? கேள்வியெழுப்புகிறார் நாவலன்!!
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் உயிரோடு இல்லையென்று சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறுகின்ற நிலையில் அண்மையில் தமிழ்நாட்டில் நெடுமாறன் ஐயாவினால் வெளியிடப்பட்ட கருத்தின் பின்னர் தீவகத்தில் கடற்படையினரால் மீனவர்களை துன்புறுத்தும் வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா, ஊடரங்கு, மண்ணெண்ணெய் விலை அதிகரிப்பு, கடலட்டை பண்ணை போன்ற தொடர்ச்சியான இடையூறுகளால் மீனவர்கள் துன்பப்படுகின்ற நிலையில்
கடற் தொழிலுக்கு செல்ல முன்பு அடையாள அட்டை பதிவு செய்யும் முறை மீளவும் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு தேவையற்ற விசாரணைகளும், இடையூறுகளும் கடற்படையினரால் விளைவிக்கப்படுவதாக ஐம்பதுக்கு மேற்பட்ட மீனவர்கள் வேதனையடைந்து நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் தனது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாக வேலணை பிரதேச சபை உறுப்பினரும், தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன் நாவலன் தெரிவித்துள்ளார். கடற்தொழில் அமைச்சராக விளங்குகின்ற டக்ளஸ் தேவானந்த அவர்களும் இக்கெடுபிடிகளை கண்டுகொள்ளவில்லை. தமிழ்த்தேசிய பரப்பிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இக்கெடுபிடிகளுக்கெதிராக உடனடியாக குரல் கொடுக்கவேண்டுமென்று திரு.க.நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.