கிங் பிஷர் பீர் மதுபான கடைகளில் கிடைக்கவில்லை- கலெக்டரிடம் புகார் அளித்த குடிமகன்!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மதுபான கடைகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மதுக்கடை நடத்துபவர்கள் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மட்டுமே விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பீர் மது பிரியர் ஒருவர் நேற்று ஜெகத்யாலா கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் தெலுங்கானாவில் உள்ள புறநகர் பகுதிகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் மாவட்ட தலைநகரங்களில் உள்ள மதுபான கடைகளில் கிங் பிஷர் பீர் விற்பனை செய்யப்படுவது இல்லை.
இதனால் கிங் பிஷர் பீரை விரும்பி குடித்து வந்த மது பிரியர்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே நகர்ப்புறங்களிலும் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். மனுவை வாங்கி படித்த கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மதுக்கடைகளில் கிங்பிஷர் பீர் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக மனுதாரரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.