யாழ்.மாநகர சபை குழப்பங்களை திசை திருப்பவே எம் மீது வீண் பழி சுமத்தினார்கள்!
யாழ்ப்பாண மாநகர சபை குழப்பங்கள் செய்திகளாக வெளிவர தொடங்கியதும் , அதனை திசை திருப்பவே வர்த்தக கண்காட்சி நடத்துபவர்கள் வரி செலுத்த வில்லை என எம் மீது அபாண்டமான பழியை சுமத்தியுள்ளனர் என யாழ்ப்பாண வர்த்தக தொழில்துறை மன்ற தலைவர் கு. விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வேளை ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடங்களில் நடைபெற்ற வர்த்தக கண்காட்சிகளின் போது , மாநகர சபைக்கு செலுத்த வேண்டிய பணத்தினை செலுத்தவில்லை என சபையில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக ஊடக செய்திகள் மூலம் அறிந்து கொண்டோம்.
நாம் செலுத்த வேண்டிய பணம் என எமக்கு உத்தியோகபூர்வமாக 17ஆம் திகதியே அறிவித்தனர். ஆனால் 15ஆம் திகதி நாம் பணம் செலுத்தவில்லை என செய்திகள் வெளியாகி இருந்தன. எமக்கு எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என அறிவிக்காமல் எம்மால் எவ்வாறு பணத்தினை செலுத்த முடியும் ?
கடந்த காலங்களில் ஆணையாளரின் கட்டுப்பாட்டில் மாநகர சபை இருந்த வேளைகளில் நாம் வரி சலுகைகளை பெற்றுக்கொண்டோம். உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுப்பதற்காகவே வரி சலுகைகளை கேட்டிருந்தோம்.
மக்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் கைகளுக்கு சபை சென்ற பின்னர் நாம் வரி சலுகைகளை கோரிய போது சபை அனுமதி பெற வேண்டும் என்றும் சபையில் அனுமதி கிடைக்கவில்லை என்றும் காலம் தாழ்த்தி பதில்களும் அளித்தனர்.
நாம் மாநகர சபைக்கு பணம் செலுத்தவில்லை என வெளியான செய்திகள் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது , மாநகர சபையின் சிலர் உறுப்பினர்கள் தமது அரசியல் சுய இலாபத்திற்காகவும் , மாநகர சபையில் அண்மைக்காலமாக காணப்படும் குழப்ப நிலைமைகள் தொடர்பிலான செய்திகளை திசை திருப்பவே எம் மீது பழி சுமத்தி செய்திகளை வெளிவர செய்துள்ளதாக அறிந்து கொண்டோம்.
நீண்ட காலமாக நாம் மாநகர சபைக்கு பணம் செலுத்தவில்லை என எம் மீது குற்றம் சுமத்துபவர்கள் ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. மாநகர சபைக்கு கிடைக்க வேண்டிய பணத்தினை நாம் கொடுக்காது இருந்தால் , எம் மீது சட்ட நடவடிக்கை எடுத்து இருக்கலாமே ? ஏன் எடுக்கவில்லை.
வர்த்தக கண்காட்சியின் போது , விற்கப்படும் தலா ஒவ்வொரு நுழைவு சீட்டுக்கும் 12 வீத வரி செலுத்துகிறோம். அது மட்டுமன்றி காட்சி கூடத்திற்கு வரி செலுத்துகிறோம், கழிவகற்றலுக்கு பணம் செலுத்துகிறோம், கண்காட்சி வளாகத்தை சுற்றி கட்டப்படும் கொடிகள் முதற்கொண்டு சிறிய விளம்பர பதாகைகள் வரை அனைத்திற்கும் மாநகர சபைக்கு பணம் செலுத்தியே நாம் கண்காட்சியை நாடத்துகிறோம் என்றார்.
அதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரையில் நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தக கண்டகாட்சியில் , 250 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் உள்ள பெரிய நிறுவனங்கள் தொடக்கம் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிய தர தொழில் முயற்சியாளர் வரைக்கும் அனைவருக்கும் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கவுள்ளோம்.
இம்முறை நுழைவு சீட்டாக 100 ரூபாய் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் வருகை தந்தால் அவர்களை இலவசமாக அனுமதிக்கவுள்ளோம் என்றார்.