மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால் நாளைக்கே விடுதலை செய்யப்படுவார்- கெஜ்ரிவால்!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தன் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுப்பி உள்ளார். அதில், தன் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் நேர்மையான அரசியலுக்கு பயந்த கோழைகள் மற்றும் பலவீனமான நபர்களின் சதி என கூறி உள்ளார். மேலும், அவர்களின் இலக்கு நான் அல்ல, நீங்கள் (கெஜ்ரிவால்) அவர்களின் இலக்கு என்றும் சிசோடியா குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை கைது செய்ததன் மூலம், சுகாதாரம் மற்றும் கல்வித் துறையில் எங்கள் அரசாங்கத்தின் பணிகளை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. மதுபான கொள்கை ஊழல் என்பது அவர்களுக்கு ஒரு சாக்குப்போக்கு. அதேசமயம் மணீஷ் சிசோடியா பாஜகவில் இணைந்தால், நாளைக்கே அவர் விடுதலையாகிவிடுவார். பிரச்சனை ஊழல் அல்ல, அமைச்சர்கள் செய்யும் நல்ல பணிகளை நிறுத்த வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆம் ஆத்மி கட்சியின் எழுச்சியை தடுக்க பாஜக விரும்புகிறது. நாங்கள் பஞ்சாப் மாநிலத்தில் வென்றதிலிருந்து, அவர்களால் தாங்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.