ஜி20 கூட்டத்தில் பங்கேற்க இந்தியா வந்தடைந்தார் அமெரிக்க வெளியுறவு மந்திரி!!
இந்தியாவின் தலைமையின் கீழ் ஜி 20 மாநாடு ஓராண்டுக்கு நடைபெறுகிறது. இதனையொட்டி, புதுடெல்லியில் மார்ச் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்க ஜி 20 உறுப்பினர் அல்லாத நாடுகள் உள்பட 40 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர். பலதரப்பு அமைப்புகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. இதில், சீன வெளியுறவு மந்திரி குவின் கேங், ரஷிய வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ், அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் மற்றும் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஜேம்ஸ் கிளெவர்லி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மத்தியில் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச அளவில் இந்தியா செலுத்தி வரும் செல்வாக்கு பற்றியும் அவர் பேசக்கூடும் என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் நடைபெற உள்ள ஜி 20 வெளியுறவு மந்திரிகளின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆன்டனி பிளிங்கன் தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.