கான்பூர் பயங்கரவாத வழக்கில் கைதான 7 பேருக்கு மரண தண்டனை!!
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட சிலர் திட்டமிட்டு உள்ளதாக உளவு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. லக்னோ போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி 8 பேரை கைது செய்தனர். இதுபற்றிய தகவல் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் கைதான 8 பேரும் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் என தெரியவந்தது. இவர்கள் கான்பூரில் பல்வேறு இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2017-ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. இது தொடர்பான வழக்கு கான்பூர் என்.ஐ.ஏ. கோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் சாட்சிகள் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட முகமது பைசல், கவுஸ் முகமது கான், முகமது அசார், அதிக் முசாபர், முகமது டேனிஷ், முகமது சையது மீர் உசைன், ஆசிப் இக்பால் ஆகிய 7 பேருக்கு நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 8-வது குற்றவாளியான முகமது ஆதிப் என்ற ஆசிப் இரானிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு அரிதிலும், அரிதான வழக்கு என்றும், எனவே தான் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளார்.