வரும் பாராளுமன்ற தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் கூட்டத்தில் கார்கே அறிவிப்பு!!
சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு பேசியதாவது:- என்னை ஒப்பிடுகையில் நீங்கள் இளமையானவர், நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலத்துடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியான மாநிலம், சிறந்த தலைவர்கள், அதிகாரிகள், எழுத்தாளர்களை உருவாக்கிய மாநிலம். தமிழ்நாடு தான் கட்டாய கல்வியை முதலில் கொண்டு வந்தது. சமூக நீதியை காப்பதில் காங்கிரசும் திமுகவும் இணைந்து செயல்படும். தமிழ்நாடு மதிய உணவுத்திட்டம், அனைவருக்கும் கல்வி, தொழில்துறை வளர்ச்சி என அனைத்து திட்டங்களையும் அறிமுகப்படுத்தியதில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமரான நேரு நாட்டில் அறிவியல் மனப்பான்மையை ஏற்படுத்த விரும்பியதை மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார். அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பு சட்டம் விழுமியங்கள் திமுகவின் அடிப்படையாக உள்ளன.
எங்களது திமுக-காங்கிரஸ் கூட்டணி அடுத்த மக்களவைத் தேர்தலிலும் தொடரும் என்பதை இந்த மேடையில் அறிவிக்கிறேன். இக்கட்டான நிலையில் நாடு தற்போது உள்ள இந்த சூழலில் எங்களது கூட்டணி தொடரும். தமிழ்நாடு பாஜகவிற்கு ஒரு இடத்தைக் கூட கொடுக்கவில்லை. தமிழ்நாடு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்கள் மூலம் பாஜக அரசியல் செய்கிறது. நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்திலும் பாஜக தலையீடு செய்து வருகிறது.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்பட வேண்டும். மக்களை வேற்றுமைப்படுத்துபவர்களுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். யார் நாட்டை வழிநடத்தப் போகிறார்கள் என நான் தெரிவிக்கவில்லை. அது முக்கியமல்ல. நாம் இணைந்து செயல்பட வேண்டும். பாஜகவிற்கு எதிரான இந்த போராட்டம் முக்கியமானது. நாம் இதில் வெற்றி பெறுவோம் என நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.