மு.க.ஸ்டாலின் சேவை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தேவை… பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பரூக் அப்துல்லா பேச்சு!!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று பிரமாண்ட பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தொடங்கியது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்பாட்டின்பேரில் நடைபெறும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தி ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசும்போது, ‘நீங்கள் தமிழகத்திற்கு மட்டும் சேவை செய்யாமல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் சேவை செய்வதற்காக நீண்ட காலம் வாழ்வீர்கள். இந்தியா இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. ஜனநாயகமும் அரசியலமைப்பும் அச்சுறுத்தப்படுகிறது. விழித்துக்கொள்வோம்’ என்றார். முன்னதாக சென்னை வந்து இறங்கியதும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, செய்தியாளர்களைச் சந்தித்தபோது, 2024 தேர்தல் குறித்தும் பிரதமர் வேட்பாளர் குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, “நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெற்றிபெறும்போது, இந்த தேசத்தை வழிநடத்தி ஒன்றிணைக்க சிறந்த மனிதர் யார் என்பதை முடிவுசெய்வார்கள்” என்றார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த பரூக் அப்துல்லா, “ஏன் முடியாது… ஏன் அவரால் பிரதமராக முடியாது… அதில் என்ன தவறு?” என்றார்.