கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ராகுல் பேச்சு ஜனநாயகத்தை மேம்படுத்த புதிய சிந்தனை அவசியம்!!!
இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நேற்று எம்பிஏ மாணவர்கள் மத்தியில் பேசினார். ‘21ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல் பேசுகையில், ‘‘அடக்குமுறை சூழலுக்கு எதிராக ஜனநாயக சூழலை உருவாக்க நமக்கு புதிய சிந்தனைகள் தேவை. அதைப் பற்றி மாணவர்களாகிய நீங்கள் ஆலோசனை நடத்த வேண்டும்.
கேட்கும் கலை மிகவும் சக்தி வாய்ந்தது. யாத்திரை எனும் புனித பயணத்தை மேற்கொள்பவர்கள், மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதற்காக தங்களை அமைதிப்படுத்திக் கொள்கிறார்கள்’’ என்றார். சமீபத்தில் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்ட ராகுல், தலைமுடி, தாடியை எடுக்காமல் இருந்தார். தற்போது இங்கிலாந்தில் அவர் தலைமுடி, தாடியை திருத்திக் கொண்டு மீண்டும் இளமையான தோற்றத்துடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.