புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு!! (மருத்துவம்)
புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட முடியாது, 2019ஆம் ஆண்டும் அதைப் பலர் தொடரவே செய்துள்ளனர்.
ஆண்கள் புகைப்பிடித்தால் நல்லது, பெண்கள் புகைப்பிடித்தால் கூடாதா? எனப் பலர் கேட்கவிளையலாம்.
இதனையே பலர் பெண்ணியம் என்றும் கூறுகின்றனர். இந்தக் கருத்து, முற்றிலும் தவறானது, ஆண்களுக்கு நிகராக, சமமான உரிமைகளைப் பெற்று, சம அந்தஸ்துடன் வாழவேண்டுமென்பதையே பெண்ணியம் வலியுறுத்துகிறது. எனவே, பெண்ணியத்தின் கருப்பொருளை சரியான முறையில் விளங்கிக்கொண்டவர்கள், இத்தகைய வாதங்களைத் தொடுக்கமட்டார்கள்.
புகைப்பிடிப்பதில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று உயர்ந்துவிட்டனர். புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நுரையீரல் புற்றுநோய்க்கு இரட்டை வாய்ப்புகள்
புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே நுரையீரல் புற்றுநோய் ஏற்பட இரட்டை வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக, அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்ட மருத்துவ நிலையம் வௌியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிகரெட் புகையை நுகர்வதில், ஆண், பெண் இருவருக்கும் வித்தியாசம் காணப்படுவதாகவும் பெண்களின் உடலில் சிகரெட் புகை தேங்கி, அது புற்றுநோயாக மாறுவதாகவும், ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதய நோய்கள் ஏற்படும்
புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கு, 25 சதவீத இதய நோய் ஏற்படுவதாக லேன்சட் பத்திரிகை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, மாரடைப்புக்கும் காரணமாக அமைந்துள்ளதென, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலைத்தேய நாடுகளில், புகைப்பிடிப்பால் ஆண்களைவிட பெண்களே அதிகம் உயிரிழக்கின்றனர் என, அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடிகள் பாதிப்பு
ஐரோப்பாவைத் தலைமையகமாகக் கொண்டுள்ள நிறுவனமொன்று மேற்கொண்ட ஆய்வில், மற்றுமொரு விடயம் கண்டறியப்பட்டுள்ளது. புகைப்பிடிக்கும் பழக்கமுடைய பெண்களின் நாடிகளானவை, மிக விரைவில் வலுவிழந்து விடுவதாக, அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றன.
இதயத்திலிருந்து இரத்தத்தை எடுத்துச் செல்லும் நாடிகள் அதிகம் பாதிப்படைவதாகவும் இது பெண்களுக்கு ஆண்களைவிட ஐந்து மடங்கு அதிகமென்றும் குறிப்பிடப்படுகிறது.
பிரசவத்தில் பாதிப்பு
புகைப்பிடிப்பதால், பிரசவம் மற்றும் கருத்தரிக்க முடியாமை போன்ற பாதிப்புகளையும் பெண்கள் எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாகக் கர்ப்பிணிகள் புகைப்பிடிப்பதால், குறைபிரசவம், சிசு மரணங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன என்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைப்பிடிப்பதால் பெண்களுக்கு மட்டுமன்றி ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனினும், ஆண்களைவிட பெண்களுக்கே இது அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.