கர்நாடகாவில் அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்!!
கர்நாடக அரசு துறைகளில் உள்ள 10 லட்சம் ஊழியர்களின் சம்பள விகிதத்தை மாற்றி அமைக்கும் நோக்கத்தில் 7-வது ஊதிய குழுவை மாநில அரசு அமைத்துள்ளது. இந்த குழுவின் இடைக்கால அறிக்கையை பிப்ரவரி இறுதிக்குள் பெற்று 40 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர். இதனால் பெங்களூருவில் உள்ள அதிகார மையமான விதான சவுதாவுக்கு ஊழியர்கள் வராததால், அது வெறிச்சோடி காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு மாநகராட்சி தலைமை அலுவலகமும் ஊழியர்கள் இன்றி காணப்பட்டன. அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், ஊழியர்கள் பணிக்கு ஆஜராகாததால் எந்த பணிகளும் நடைபெறவில்லை.
பெங்களூருவில் உள்ள விக்டோரியா, பவுரிங், கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரிகளிலும் புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டு இருந்தது. இதனால் ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகள், டாக்டர்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பெங்களூரு நகர கலெக்டர் அலுவலகம், புறநகர் கலெக்டர் அலுவலகங்களிலும் ஊழியர்கள் இல்லாததால், பணிகள் பாதிக்கப்பட்டன. அரசின் சேவை வேண்டி அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அரசு பள்ளிகள் வழக்கம் போல் திறக்கப்பட்டு இருந்தன. குழந்தைகள் பள்ளிக்கு வருகை தந்தனர்.
ஆனால் ஆசிரியா்கள் பணிக்கு வராததால், பாடம் எடுக்க ஆட்கள் இருக்கவில்லை. இதனால் குழந்தைகள் பாடம் கற்க முடியாமல் ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பினர். இதுபோல் தட்சிணகன்னடா, சிவமொக்கா, உடுப்பி, சிக்கமகளூரு, பெலகாவி, மைசூரு, மண்டியா, துமகூரு, ராமநகர், ஹாசன், தார்வார், கோலார், சிக்பள்ளாப்பூர் உள்பட மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடின. மாநிலம் முழுவதும் 10 லட்சம் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதால் அரசு பணிகள் முடங்கி இருந்தன. இந்த நிலையில் இடைக்கால நிவாரணமாக அவர்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் ஷடக்சரி, சம்பள உயர்வு குறித்து வெறும் உறுதிமொழி கொடுத்தால் போதாது, உத்தரவு பிறப்பிக்கும் வரை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம் என்று கூறினார். அதைத்தொடர்ந்து அரசு, 17 சதவீத சம்பள உயர்வுக்கான அரசாணையை மாநில அரசு வெளியிட்டது.
அதில் 17 சதவீத சம்பள உயர்வு வருகிற ஏப்ரல் மாதம் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படும். அகவிலைப்படி உள்ளிட்ட இதர படிகள் உயர்த்தப்படும்போது, இந்த உயர்த்தப்படும் சம்பளம் கருத்தில் கொள்ளப்படாது. ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்திலும் 17 சதவீதம் உயர்த்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை அடுத்து கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கம், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. சம்பள உயர்வு குறித்த அரசின் உத்தரவை வரவேற்பதாக அந்த சங்க தலைவர் ஷடக்சரி கூறினார். அதைத்தொடர்ந்து ஊழியர்கள் அனைவரும் பணிக்கு ஆஜராயினர். இந்த சம்பள உயர்வு மூலம் அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.2,890-ம், அதிகபட்சமாக ரூ.25 ஆயிரத்து 602-ம் உயரும்.