இந்த ஆண்டின் முதல் சீன சுற்றுலாப் பயணிகளின் குழு நாட்டிற்கு!!
சீன சுற்றுலாப் பயணிகளின் வருகையை மீண்டும் ஆரம்பித்து, 2023ஆம் ஆண்டு இலங்கைக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் முதலாவது குழு இலங்கையின் விசேட விமானம் மூலம் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இலங்கைக்கு 07 நாள் விஜயமாக 117 சீன சுற்றுலா பயணிகள் வந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
இவர்கள் நேற்று இரவு 11.10 மணியளவில் சீனாவின் குவான்சோவிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL-1881 என்ற விசேட விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
சுற்றுலா அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ சாங்ஹோங், சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவர் சாலக கஜபாஹு, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் ஆகியன சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் வாரத்திற்கு 09 விமானங்களை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடத்தவுள்ளன. மேலும் அந்த விமானங்கள் மூலம் 5,000 சீன சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.