;
Athirady Tamil News

பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்கின்றன – ஆய்வில் புதிய தகவல்!!

0

இலங்கையில் உள்ள அரைவாசிக்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும் அளவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக சேவ் தி சில்ரன் மேற்கொண்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.

நாட்டின் பொருளாதார மந்தநிலையால் ஏற்பட்ட பட்டினி நெருக்கடியால் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனைத் தடுப்பதற்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை காப்பாற்றுவதற்கும் அரசாங்கமும் சர்வதேச சமூகமும் தற்போதிருந்தே செயற்பட வேண்டுமென சேவ் தி சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஒரு வருடத்திற்கு முன் இலங்கை அரசாங்கம் தனது கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதிலிருந்து, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு, மருந்து மற்றும் எரிபொருள் நெருக்கடி, பற்றாக்குறை மற்றும் வேலையின்மை போன்ற பிரச்சினைகள் குடும்பங்களில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

உலக வங்கியின் கூற்றுப்படி, உலகில் மிகவும் உயர்ந்த உணவுப் பணவீக்க உடைய நாடுகள் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது.

பணவீக்கத்தின் காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் சராசரி குடும்பச் செலவு 18 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இந்தக் கால கட்டத்தில் குடும்பங்களில் 23 வீத அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் பெரும்பாலான அல்லது அனைத்து அடிப்படைத் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது போனதாகவும் இலங்கையில் 9 மாவட்டங்களில் உள்ள 2,308 குடும்பங்களில் சேவ் தி சில்ட்ரன் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், அதிகமான குடும்பங்கள் உயிர்வாழ்வதற்கான வேறு தேவைகளை நாடவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டனர்.

கடந்த காலங்களில் குடும்பங்களில் 24 வீத அதிகரிப்பையடுத்து, வீட்டுச் செலவுகளை ஈடுசெய்வதற்காக கடன் வாங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளதாகவும், உணவுகளை கடனுக்கு பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீட்டு உபயோகப் பொருட்களை பணத்திற்கு விற்கும் நிலையில் 28 வீதமான குடும்பங்கள் காணப்படுகவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் குறிப்பாக பாதிக்கப்படக்கூடியவை என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் பெண்கள் கடத்தல் அல்லது சுரண்டல், கூடுதல் நேரம் வேலை செய்வது மற்றும் சில சந்தர்ப்பங்களில் வேலைக்காக இடம்பெயர்வது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் தனிமையில் விடப்பட நேருவதால், அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் என சேவ் தி சில்ரன் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

அரைவாசிக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் உணவு உட்கொள்ளும் அளவைக் குறைப்பதாகக் கூறினாலும், 27 வீதமானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிப்பதற்கான உணவைத் தவிர்ப்பதாகக் கூறியுள்ளனர். பத்தில் ஒன்பது குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுக்கு போசாக்கான உணவுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்று கூறியுள்ளன.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 70 வீதமான குடும்பங்கள் தங்களது வருமான ஆதாரங்களில் அனைத்தையும் அல்லது பெரும்பாலானவற்றை இழந்துள்ளதாகவும் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

இவற்றில், அரவாசிக்கும் மேற்பட்ட அதாவது 54 வீதமான குடும்பங்கள் தற்போது தங்களது குடும்ப வருமானத்தை பருவகால தொழில்களின் அடிப்படையிலும் ஒழுங்கற்ற வேலைகளின் மூலமும் பெற்றுக்கொள்கின்றன. இந்த உறுதியற்ற தன்மை குழந்தைளுக்கான அடுத்தவேளை உணவுகளை எங்கிருந்து பெற்றுக்கொள்வது என்று என்று தெரியாத ஒரு ஆபத்தான நிலைக்கு இட்டுச்செல்வதாக சேவ் தி சில்ரன் அமைப்பு குறிப்பட்டுள்ளது.

இது குறித்து சேவ் தி சில்ட்ரனின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா கூறுகையில்,

“ இந்தப் புள்ளிவிபரங்கள், இலங்கையின் நெருக்கடி எவ்வாறு கட்டுப்பாட்டை மீறிச் செல்கிறது என்பதையும், எந்தவொரு நெருக்கடியையும் போலவே, குழந்தைகள் தங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம், போஷாக்கு மற்றும் எவ்வாறு சுமைகளைத் தாங்குகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.

கல்வி நடவடிக்கைகள் ஆபத்தில் உள்ளன. இந்த குழந்தைகள் நாட்டின் போருக்குப் பிந்தைய தலைமுறையாக நம்பிக்கையுடன் பிறந்தனர் ஆனால் நாங்கள் மீண்டும் தோல்வியடையும் அபாயத்தில் இருக்கிறோம் என்பதை காட்டுகின்றது.

“ இங்கு நாம் காணும் அனைத்தும் ஒரு முழுமையான உணவு நெருக்கடியின் உண்மையான ஆபத்தை சுட்டிக்காட்டுகின்றன. இலங்கை அரசாங்கம் சில குடும்பங்களுக்கு நலன்புரி திட்டங்கள் மூலம் மிகவும் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது, ஆனால் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் சமூக பாதுகாப்பு அமைப்புகளை விரைவாக கட்டியெழுப்ப வேண்டும். இது ஒரு அவசர காலநிலை என்பதுடன் இதற்கு அவசரமாக பதில் தேவைப்படுகிறது.”

அனைத்து மனிதாபிமான தலையீடுகளின் தேவைகளை சிறப்பாக பூர்த்தி செய்வதற்கு சமூகங்களின் பாலின இயக்கவியலில் காரணியாக இருக்க வேண்டும் என சேவ் தி சில்ட்ரனின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜூலியன் செல்லப்பா மேலும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.