சுற்றுலா துறையை மேம்படுத்த 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகள் வழங்க திட்டம்: ஹாங்காங் அரசு அறிவிப்பு !!
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலா துறையை மேம்படுத்தும் வகையில் வெளிநாட்டினருக்கு 5 லட்ச விமான டிக்கெட்களை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அறிவித்துள்ளது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக அந்த நாட்டின் சுற்றுலா முற்றிலும் முடங்கியது. கடந்த 2022 ஆம் ஆண்டு வெறும் 6 லட்சம் பேர் மட்டுமே அந்த நாட்டிற்கு பயணம் மேற்கொண்டு இருந்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது வெறும் ஒரு லட்சம் மட்டுமே ஆகும். கடுமையான பாதுகாப்பு சட்டங்கள், அரசியல் அடக்குமுறைகள், கொரோனா கட்டுப்பாடுகளால் தொழில் செய்வதற்கு உகந்த நாடு என்ற ஹாங்காங்கின் பிம்பமும் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டது. இதனால் கடுமையான வருவாய் இழப்பையும் சந்தித்த ஹாங்காங் 3 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது கொரோனா பரவல் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மீண்டும் சுற்றுலாவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது.
ஹல்லோ ஹாங்காங் என்ற கோஷத்துடன் பிரசாரத்தை தொடங்கியிருக்கும் ஹாங்காங் சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் விதமாக 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக தங்கள் நாட்டிற்குள் வருவோர் கட்டாயமாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்தியுள்ள ஹாங்காங் அரசு சிங்கப்பூர், தாய்லாந்த், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மலேசியா, வியட்நாம் மற்றும் கம்போடியா நாடுகளை சேர்ந்தவர்களுக்கு இச்சலுகையை அறிவித்துள்ளது. இதற்காக கொரோனா காலத்திலேயே விமான டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டதாக தெரிவித்துள்ள ஹாங்காங் தங்கள் நாட்டிற்கு வருவோர் குறைந்தபட்சம் 2 நாட்கள் தங்கியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது.