இல்லுமினாட்டி ரகசிய சமூகம் எங்கு தோன்றியது? அதன் வரலாறு என்ன?
இல்லுமினாட்டி சமூகம் என்பது உண்மையா பொய்யா என்ற கேள்விக்கு பதில் இரண்டும்தான். இல்லுமினாட்டி என்றொரு சமூகம் இந்த உலகில் உண்மையாகவே இருந்துள்ளது.
ஆனால் சமீப நூற்றாண்டுகளில் நடந்த பெரும் புரட்சிகள், முக்கியப் புள்ளிகளின் படுகொலைகள் உள்ளிட்டவற்றின் பின்னணியில் இருக்கும் ஒரு சர்வதேச ரகசிய சமூகமாக, உலகை கட்டுப்படுத்த விரும்பும் சமூகமாக இல்லுமினாட்டிகள் இருக்கிறார்கள் என்ற சதித்திட்ட கோட்பாடு இதை ஒரு கற்பனை சமூகமாகவும் கருத வைக்கிறது.
உண்மையாகவே இல்லுமினாட்டிகள் இருந்தார்கள் என்றால் அவர்கள் எங்கு எப்போது இருந்தார்கள்?
ஐரோப்பாவில் தற்கால ஜெர்மனியில் அமைந்துள்ள பவாரியா எனுமிடத்தில் இல்லுமினாட்டி எனும் ஒரு ரகசிய சமூகம் 18ஆம் நூற்றாண்டில் இயங்கி வந்தது. 1776 முதல் 1785 வரை இயங்கிய இந்த ரகசிய சமூகத்தின் உறுப்பினர்கள் தங்களை தாங்களே பெர்ஃபெக்டிபிலிஸ்ட்ஸ் (Perfectibilists) என்று அழைத்துக் கொண்டனர்.
கிறிஸ்தவ மத சட்டங்களுக்கான பேராசிரியராக இருந்த ஆடம் வைசாப்ட் என்பவரால் நிறுவப்பட்ட இந்த ரகசியக் குழு முக்தி அடைவதற்கான கொள்கைகளின் மூலம் உந்தப்பட்டு இருந்தது.
இதை நிறுவிய பேராசிரியர் ஆடம் சமூகத்தின் மீது மூட நம்பிக்கைகள் மற்றும் மதங்கள் செலுத்தும் தாக்கத்தை நீக்கி பகுத்தறிவு மற்றும் ஈகை த்தன்மையை வலுவாக்க விரும்பினார்.
ஐரோப்பிய நாடுகளில் அரசாங்கங்களின் மதத்தின் கட்டுப்பாடு அதிகமாக இருப்பதை விளக்கி மக்களுக்கு ஒளிமயமான ஒரு புதிய ஆதாரத்தை (illumination) கொண்டு வருவதற்கான மாற்றங்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்று பேராசிரியர் ஆடம் வைசாப்ட் விரும்பினார்.
இன்கோல்ஸ்டாட் எனும் பகுதிக்கு அருகே உள்ள காடு ஒன்றில் மே 1, 1886 அன்று இந்த பவாரியா இல்லுமினாட்டி சமூகத்தின் முதல் கூட்டம் நடைபெற்றது என்று கருதப்படுகிறது.
இந்த ரகசிய சமூகத்திற்கான சட்டதிட்டங்களை இந்த இடத்தில் ஐந்து பேர் கூடி உருவாக்கியுள்ளனர்.
இதன் பிறகு ஐரோப்பிய நாடுகளின் அரசியல் முடிவுகளையும் முடிவுகளில் தாக்கம் செலுத்துவதையும் மதம் மற்றும் முடியாட்சி போன்ற சமூக கட்டமைப்புகளை மாற்றுவதையும் இந்தக் குழு தனது நோக்கமாகக் கொண்டது.
இல்லுமினாட்டிகளின் சடங்குகள் குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.
இல்லுமினாட்டிகளின் சடங்குகள் குறித்து அதிக தகவல்கள் கிடைக்கவில்லை.
சதித்திட்ட கோட்பாடுகள் தொடர்பு படுத்தப்படும் இன்னொரு சமூகமான ஃப்ரீமேசன்ஸ் (Freemasons) எனும் குழுவில் இலுமினாட்டிகள் இணைந்தார்கள்.
இவர்கள் இணைந்ததற்கான காரணம் இல்லுமினாட்டிகளின் புதியவர்களை சேர்க்கவேண்டும் என்பதே.
மத்திய வரலாற்றுக் காலத்தில் இயங்கிய கட்டடக்கலை சார்ந்த பல அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஒரு சமூகம் ஃப்ரீமேசன்ஸ் சமூகம் என்று மேற்குலக நாடுகளில் அழைக்கப்படுகிறது.
கட்டடக்கலை சார்ந்த தொழிலில் இருந்த் பெரும்பாலானவர்களுக்கு வெவ்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டி இருந்ததால் அவர்களுக்கு இந்த ஃப்ரீமேசன்ஸ் சமூகம் மிகவும் முக்கியமானதாக இருந்ததாகவும் பிபிசி டிராவல் இணையதளத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சமூகத்தின் உறுப்பினர்களுக்கு இடையே இருந்த பிரத்தியேகமான கை குலுக்கும் முறை, ரகசிய குறியீடுகள், சொற்கள் உள்ளிட்டவை இவர்கள் ஒரு ரகசிய சமூகம் எனும் சதித்திட்டக் கோட்பாடு பிறப்பதற்குக் காரணமாக அமைந்தது.
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் தொடங்கப்பட்ட ஆரம்பகாலத்தில் ஃப்ரீமேசன்ஸ் சமூகத்தில் இருந்தவர்கள் இலுமினாட்டி உறுப்பினர்களாக சேர்ந்ததால் சிலர் இந்த இரண்டு சமூகங்களும் ஒன்று என்று சிலர் குழப்பம் அடைவதுமுண்டு.
காலப்போக்கில் ‘மினர்வாவின் ஆந்தை’ (The Owl of Minerva) இலுமினாட்டி சமூகத்தின் முக்கிய சின்னம் ஆனது. ‘மினர்வா’ என்பது அறிவுக்கான ரோம பெண் கடவுளின் பெயர்.
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் இயங்கிய காலத்தில் ஒருவர் புதிதாக இல்லுமினாட்டி சமூகத்தில் உறுப்பினராக சேர வேண்டுமென்றால் அவருக்கு அதிக செல்வமும் அவர் சார்ந்திருந்த குடும்பத்தில் நல்ல பெயரும் இருக்க வேண்டும்.
அவர் இணைவதற்கு ஏற்கனவே உறுப்பினர்களாக இருக்கும் இல்லுமினாட்டிகள் ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்.
இல்லுமினாட்டி உறுப்பினர்களுக்கும் பல்வேறு அடுக்குகள் இருந்தன. ஆரம்பகால உறுப்பினராக (novice) சேர்ந்த ஒருவர் பின்னர் இல்லுமினாட்டிகளில் ‘மினர்வல்’ (minerval) ஆக்கப்படுவார்.
அதன்பின்பு ‘தீர்க்க தரிசனம் பெற்ற மினர்வல்’ (illuminated minerval) ஆவார்கள்.
இந்த அடுக்கு மேலும் அதிகமாகப்பட்டு 13 நிலைகளை கடந்த பின்னரே ஒருவர் இல்லுமினாட்டி ஆக வேண்டியிருந்தது.
இல்லுமினாட்டி ரகசிய சமூகத்தினர் சடங்குகளில் ஈடுபட்டார்களா?
இல்லுமினாட்டிகள் சடங்குகள் செய்துள்ளனர். ஆனால் அவர்களின் பெரும்பாலான சடங்குகள் எந்த மாதிரியானவை என்பது தெரியவில்லை.
இந்த ரகசிய சமூகத்தின் உறுப்பினர்களும் ரகசியப் பெயர்களிலேயே இயங்கி வந்தனர். இல்லுமினாட்டிகள் சமூகத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட சில ரகசிய ஆவணங்கள் இருந்தாலும் அவர்கள் எப்படி இலுமினாட்டி சமூகத்தில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்குச் செல்வது என்பது குறித்த விவரங்கள் அதில் இல்லை.
புதிதாக சேர்பவர்கள் தங்களிடம் இருக்கும் புத்தகங்கள் பட்டியலை அளிக்க வேண்டும்.
இத்துடன் தங்களுடைய பலவீனங்கள் என்ன என்பதையும் தங்களுடைய எதிரிகள் யார் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும். பொது நலனுக்காக தங்களது சொந்த நலனை தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
‘ஐ ஆஃப் ப்ராவிடன்ஸ்’ (Eye of Providence) எனும் சின்னம் உலகெங்கிலும் உள்ள பல தேவாலயங்களில் வைக்கப்பட்டுள்ளது.
மசானிக் கட்டடங்களிலும் ஒரு டாலர் அமெரிக்க பணத்திலும் இந்த சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த சின்னம் ஃப்ரீமேசன்ஸ் சமூகத்துடன் தொடர்பு படுத்தப்படுவதுடன் மட்டுமல்லாமல் இல்லுமினாட்டி சமூகம் உலகைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் விரும்புகிறது என்று கோட்பாட்டுடனும் தொடர்புபடுத்தப்படுகிறது.
ஆனால் உண்மையில் இது ஒரு கிறிஸ்தவ மத சின்னம். கடவுள் மனித சமூகத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த முக்கோணத்திற்கு இருக்கும் கண் ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டது.
பதினெட்டாம் நூற்றாண்டில் மதம் அல்லாத தீவிர கண்காணிப்புடன் தொடர்புபடுத்தப்படும் வேறு காரணங்களுக்காகவும் இந்த சின்னம் பயன்படுத்தப்பட்டது.
“இல்லுமினாட்டி சமூகத்தினர் இந்த உலகை கட்டுப்படுத்துகிறார்கள். இன்றளவும் இலுமினாட்டி சமூகத்தினர் ரகசியமாக இயங்குவதாகவும் உலகை கட்டுப்படுத்துவதாகும் இவர்கள் குறித்து மிகச் சிலருக்கு மட்டுமே தெரியும்,” என்றும் சிலர் கருதுகிறார்கள்.
இல்லுமினாட்டி சமூகத்தில் இருந்தவர்கள் ஃப்ரீமேசன்ஸ் சமூகத்துக்கும், ஃப்ரீமேசன்ஸ் சமூகத்தில் இருந்தவர்கள் இல்லுமினாட்டி சமூகத்துக்குள்ளும் உறுப்பினர்களாக இணைந்ததால் இல்லுமினாட்டிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொண்டவர்கள் உண்மையாகவே அதிகாரம் மிக்கவர்களாக விளங்கினார்களா என்பதை கணிப்பது மிகவும் கடினமானதாக உள்ளது.
ஆனால் ஃப்ரீமேசன்ஸ் சமூகத்தினர் ஓரளவு மிதமான செல்வாக்கு கொண்டவர்களாக இருப்பதாக பல வரலாற்று அறிஞர்கள் கூறுகிறார்கள். ஃப்ரீமேசன்ஸ் கட்டடக்கலை சமூகத்தினர் உருவாக்கிய கட்டடக் கலையில் கட்டப்பட்ட கட்டடங்கள் இன்றளவும் உலகநாடுகள் பலவற்றிலும் உள்ளன. இவற்றில் தேவாலயங்களும் அடக்கம்.
புகழ்பெற்ற இல்லுமினாட்டி உறுப்பினர்கள் யார்?
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் தொடங்கப்பட்ட பின்பு சில ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை அதிகரித்தது. 1772ல் இலுமினாட்டிகள் எண்ணிக்கை சுமார் 600 ஆக இருந்தது. இவர்களில் ஜெர்மன் மேட்டுக்குடியை சேர்ந்த பேரோன் அடால்ஃப் வான் நிக் என்பவர் முக்கியமானவராக இருந்தார்.
இவர் ஃப்ரீமேசன்ஸ் சமூகத்தில் இருந்து இல்லுமினாட்டி சமூகத்துக்கு வந்தவர். இல்லுமினாட்டி குழு அமைப்பு ரீதியாக விரிவடைய இவர் உதவினார்.
தொடக்க காலத்தில் இந்த ரகசிய சமூகத்தை நிறுவிய பேராசிரியர் ஆடம் வைசாப்ட் -இன் மாணவர்கள் மட்டுமே இல்லுமினாட்டி குழுவில் உறுப்பினர்களாக இருந்தனர்.
அதன் பின்பு மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பிற துறைசார் வல்லுனர்கள் இந்தக் குழுவில் இணைந்தனர்.
1784 காலகட்டத்தில் இல்லுமினாட்டி குழுவில் 2000 முதல் 3000 பேர் உறுப்பினராக இருந்துள்ளனர்.
புகழ்பெற்ற எழுத்தாளர் ஜோகன் வால்ஃப்கேங் வான் கோதே இல்லுமினாட்டி உறுப்பினராக இருந்தார் என்று சில ஆவணங்கள் கூறினாலும், அது கடுமையாக மறுக்கப்படுகிறது.
இல்லுமினாட்டி காணாமல் போனது எப்படி?
1754 பவாரியாவின் கோமகனாக இருந்த கார்ல் தியோடர் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத ரகசிய சமூகங்கள் எதையும் உருவாக்குவதற்குத் தடை விதித்தார். அதன் பின்பு அதற்கு அடுத்த ஆண்டு இல்லுமினாட்டி ரகசிய சமூகம் இயங்குவதற்கும் அவர் தடை விதித்தார்.
இலுமினாட்டி குழுவின் உறுப்பினர்கள் என்று சந்தேகப்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட பொழுது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் கடவுள் மறுப்புக் கொள்கை, தற்கொலை ஆகியவற்றை நியாயப்படுத்துவதற்கான குறிப்புகள் இருந்தன.
கருக்கலைப்பு எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்பதை விவரிக்கும் ஆவணங்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக இல்லுமினாட்டி குழு முடியாட்சி எனும் அமைப்புக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் இல்லுமினாட்டி குழு மிகவும் ஆபத்தானதாக இருக்கும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.
இதன் பின்பு காலப்போக்கில் இல்லுமினாட்டிகள் குழு மாயமானது. ஒரு சிலர் இவர்கள் தொடர்ந்து ரகசியமாக இயங்குவதாக நம்புகிறார்கள்.
பேராசிரியர் ஆடம் வைசாப்டுக்கு என்ன ஆனது?
இன்கோல்ஸ்டாட் பல்கலைக்கழகத்தில் அவரது பதவி பறிக்கப்பட்டது. பவாரியாவில் அவர் நாடுகடத்தப்பட்ட பின்னர். துரிங்கியாவில் உள்ள கோதா எனும் இடத்தில் அவர் தமது வாழ்வின் மிச்சக் காலத்தை கழித்தார். 1830ஆம் ஆண்டு அவர் உயிரிழந்தார்.
இல்லுமினாட்டி ரகசிய சமூகம் கலைக்கப்பட்ட பின்பும் அவர்கள் குறித்த சதித்திட்ட கோட்பாடுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே உள்ளன.
1798ஆம் ஆண்டு அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் எழுதிய கடிதம் ஒன்றில் இல்லுமினாட்டிகளின் அச்சுறுத்தல் தவிர்க்கப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.
இது அந்த ரகசிய சமூகம் இன்னும் தொடர்ந்து இயங்குகிறது எனும் நம்பிக்கைகுத் தீனியாக அமைந்தது இதற்கு பின்னரும் தொடர்ந்து இல்லுமினாட்டிகள் இருப்பதாக பல புத்தகங்களும் உரைகளும் வெளியிடப்பட்டன.
மூன்றாவது அமெரிக்க அதிபராக இருந்த தாமஸ் ஜெஃபர்சன் இல்லுமினாட்டி ரகசிய சமூகத்தின் உறுப்பினராக இருந்தார் என்று ஆதாரம் இல்லாமல் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டது.
இல்லுமினாட்டிகள் பற்றிய சதித்திட்ட கோட்பாடு மட்டுமல்லாமல் அதன் பின்பு இன்னும் பல சதித்திட்ட கோட்பாடுகளும் கடந்த சில நூற்றாண்டுகளாகவே பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகின்றன.
உதாரணமாக நியூ வேர்ல்ட் ஆர்டர் (New World Order) என்னும் கோட்பாட்டை நம்புபவர்கள் இருக்கின்றனர். இல்லுமினாட்டிகள் போலவே நியூ வேர்ல்டு ஆர்டர்-இன் உறுப்பினர்களும் உலகத்தை கட்டுபடுத்தி ஆட்சி செய்ய நினைக்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.
ஆனால் இல்லுமினாட்டி சதித்திட்ட கோட்பாட்டை போலவே இதற்கும் எந்தவிதமான ஆதாரமும் கிடையாது.