ஸ்பேஸ்பார்க் வேலை கிடைக்க பினராயி விஜயனை அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசினேன்- ஸ்வப்னா சுரேஷ் பரபரப்பு!!
வளைகுடா நாட்டில் இருந்து கேரளாவுக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைதானவர் ஸ்வப்னா சுரேஷ். இவருக்கும், ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக எழுந்த புகாரில் சிவசங்கர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில் ஸ்வப்னா சுரேசுக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க் நிறுவனத்தில் வேலை கிடைத்தது எப்படி? என்பது பற்றி எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் கேரள சட்டசபையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பல்வேறு கேள்விகள் எழுப்பினர். இதற்கு ஆளும் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு, ஸ்வப்னா சுரேசுக்கும், முதல்-மந்திரி பினராய் விஜயனுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று கூறினர். பினராய் விஜயனும் இந்த குற்றச்சாட்டை மறுத்தார். இதற்கு பதில் அளித்து ஸ்வப்னா ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.
அதில் அவர் கூறியதாவது:- கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்து பேசியது உண்மை. இதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கர் உதவி செய்தார். அதன்பின்புதான் எனக்கு கேரள அரசின் ஸ்பேஸ்பார்க்கில் வேலை கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார். ஸ்வப்னா சுரேசின் பேட்டியை தொடர்ந்து கேரளாவில் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.