;
Athirady Tamil News

பருவம் தவறிய மழையால் பாதிப்பு- விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணம் ரூ.112.72 கோடி வழங்க முதல்வர் உத்தரவு!!

0

தமிழ்நாட்டில் நடப்பாண்டு 2023 ஜனவரி கடைசி வாரத்திலும், பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக 112 கோடியே 72 இலட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நடப்பாண்டு ஜனவரி கடைசி வாரத்திலும் பிப்ரவரி முதல் வாரத்திலும் பெய்த பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டு 33 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள நெற்பயிருக்கு உயர்த்தப்பட்ட நிவாரணமாக எக்டேருக்கு ரூ.20 ஆயிரமும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என முதலமைச்சர் 6-2-2023 அன்று அறிவித்தார். அவரது அறிவுரையின்படி அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை ஆகிய 9 மாவட்டங்களில் வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பயிர்சேத கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

இதில் 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் உள்ளிட்ட இதர பயிர்கள் 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் சேதமடைந்துள்ளதெனக் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. பருவம் தவறிய கனமழையால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, 1,33,907 விவசாயிகள் பயனடையும் வகையில், 93,874 எக்டேர் பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்களுக்கு, உயர்த்தப்பட்ட நிவாரணமாக மாநில பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதியிலிருந்து 112 கோடியே 72 இலட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இந்த நிவாரண உதவியை தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதலமைச்சர் அறிவுரையும் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து, பாதிப்பிற்குள்ளான விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.